நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53
அக்காலத்தில்
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”
“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 13: 47-53
“அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்”
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பங்குப் பணியாளருடைய இல்லத்திற்குப் பின்னால், ஐந்தாறு கொய்யா மரங்கள் இருந்தன. அந்த மரங்களிலிருந்து அவ்வப்பொழுது காய் காய்த்துப் பழம் பழுக்கும். அப்பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றி வந்த அருள்பணியாளர் அப்பழங்களை அங்கிருந்த பள்ளிக்கூட விடுதியில் தங்கிப் படித்துவந்த ஏழை மாணவர்களுக்குக் கொடுப்பது வழக்கம்.
ஒருமுறை அவர் மரங்களிலிருந்து பழங்களை யாரோ தொடர்ந்து பறிப்பதை அறிந்தார். இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்த அவர், ஒரு பலகையைத் தயார்செய்து, அதில், ‘கடவுள் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்’ என்று எழுதி, அதைக் கொய்யா மரங்கள் இருந்த பகுதியில் வைத்துவிட்டு, மறுநாள் போய்ப் பார்த்தார். அப்படியிருந்தும் பழங்கள் திருடுபோயிருந்தன. மட்டுமல்லாமல், ‘கடவுள் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்’ என்று எழுதப்பட்டிருந்த பலகைக்குக் கீழ், ‘கடவுள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாரைப்பற்றியும் யாரிடமும் சொல்லமாட்டார்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்.
இதைப் படித்துப் பார்த்துவிட்டு மிகவும் அதிர்ச்சியடைந்த அவர், அந்தப் பலகையில், ‘கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு செய்வார்’ (உரோ 2:6) என்று எழுதி வைத்தார். அன்று இரவு அவர் தூங்கிய பிறகு, பழங்களைப் பறிக்கும் இருவர் அங்கு வந்தனர். அவர்கள் அருள்பணியாளர் எழுதி வைத்திருந்த இறைவார்த்தையைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘என்ன! கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுகேற்பக் கைம்மாறு செய்வாரா..? அதையும் பார்த்துவிடுவோம்!’ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டு பழங்களைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடினர்.
அந்த நேரம் வேலையை முடித்துக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பி வந்த ஊர் நாட்டாண்மை, அவர்கள் இருவரும் பங்குப் பணியாளரின் இல்லத்திற்குப் பின்னாலிருந்து ஓடிவதைப் பார்த்துவிட்டு, என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவராய், அவர்கள் இருவரையும் நையப்புடைத்தார். எந்தளவுக்கு என்றால், அதன்பிறகு அவர்கள் இருவரும் பங்குப் பணியாளரது இல்லத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை (The Storyteller’s Minute – Frank Mihalic, SVD)
வேடிக்கையாகச் சொல்லபட்ட நிகழ்வாக இருந்தாலும், தவறான வழியில் செல்லக்கூடியவர்கள், அதற்கான தண்டனையைப் பெறுவார்கள் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நல்லவர் விண்ணகமும், தீயவர் பாதாளமும் செல்வர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நல்லவற்றைக் கூடைகளிலும் கெட்டவற்றை வெளியேயும் எறிவர்
நற்செய்தியில் இயேசு, விண்ணரசைக் கடலில் வீசப்பட்டு, எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டு வரும் வலைக்கு ஒப்பிடுகின்றார். வலை நிறைந்ததும் எப்படி நல்லவற்றைக் கூடையிலும், கெட்டவற்றை வெளியேயும் எறிவார்களோ, அப்படி உலக முடிவிலும் நேர்மையாளர்களிடமிருந்து தீயவர்கள் பிரிக்கப்பட்டுத் தீச்சூளையில் தள்ளப்படுவார்கள் என்கின்றார். அப்படியெனில், நேர்மையாளர்கள் நேர்மைக்கான கைம்மாறினையும், தீயவர்கள் தாங்கள் செய்த தீமைக்குக் கைம்மாறினையும் பெறுவார்கள் என்பது உறுதியாகின்றது.
ஆண்டவராகிய இயேசு, ஒவ்வொருவரிடமும், அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடச் சொன்னார் (மத் 6: 33). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்குப் பணிந்து, யாரெல்லாம் அவரது ஆட்சியை நாடுகின்றார்களோ அவர்கள் நேர்மையாளர்களைப் போன்று விண்ணகத்தில் இடம் பெறுகின்றார்கள். அதேநேரத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேளாமல் தீய வழியில் செல்கின்றவர்கள் தீச்சூளையில் தள்ளப்படுகின்றார்கள்.
நாம் விண்ணகம் செல்வதும் பாதாளம் செல்வதும் நம் கையில் உள்ளது என்பதை உணர்வது நல்லது
களைகள் உவமைக்கும், வலை உவமைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம். இயேசு சொல்லும் களைகள் உவமையும், வலை உவமையைப் போன்று, உலக முடிவின்போது நல்லவர்கள் விண்ணகம் செல்வார்கள்… தீயவர்கள் பாதாளம் செல்வார்கள் என்ற செய்தியைத்தானே சொல்கின்றது! அப்படியிருக்கையில் வலை உவமையில் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதே அந்தக் கேள்வி. களைகள் உவமை பாவிகள் மனம்மாறக் கடவுள் பொறுமையோடு இருக்கின்றார் என்பதைச் சொல்வதாக இருக்கின்றது; ஆனால், வலை உவமையோ இறுதித் தீர்ப்பைப் பற்றிச் சொல்கின்றது. அது மனம்மாறுவதற்குக் கொடுக்கப்பட்ட காலத்தையும் ஒருவர் சரியாகப் பயன்படுத்தாதபோது, அவர் அதற்கேற்ற தண்டனையைப் பெறுவார் என்பதை எடுத்துச் சொல்கின்றது.
ஆகையால், நாம் கடவுளிடமிருந்து அருளைப் பெற தீய வழியில் அல்ல, நல்லவழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘மானிடமகன் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்’ (மத் 16: 27) என்பார் இயேசு. ஆகையால், கடவுள் நம்முடைய குற்றங்களை மன்னிப்பவராக இருந்தாலும், இறுதித் தீர்ப்பின்பொழுது, அவர் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed