இத்தாலியில் குளிர் காலம் துவங்கியிருப்பதாலும் நிலையிலும், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை தூறி வருவதாலும், திருத்தந்தை புனித 6ம் பவுல் மண்டபத்திலேயே தன் புதன் மறைக்கல்வி உரையையொட்டி, கடந்த புதனன்று திருப்பயணிகளை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அந்த அரங்கிலேயே திருப்பயணிகளைச் சந்தித்தார். இறைவேண்டல் குறித்த மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக, அக்டோபர் 14, இப்புதனன்று, திருப்பாடல்களில் இறைவேண்டல் என்பது குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் திருப்பாடல் 13லிருந்து, அதன் துவக்கப்பகுதியும் இறுதிப்பகுதியும் பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டன.
ஆண்டவரே, எத்தனை நாள்
என்னை மறந்திருப்பீர்?
இறுதிவரை மறந்துவிடுவீரோ?
இன்னும் எத்தனை நாள்
உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?
எத்தனை நாள் வேதனையுற்று
எனக்குள் போராடுவேன்?
நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;
எத்தனை நாள் என் எதிரி
எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?
[…]
நான் உமது பேரன்பில் நம்பிக்கை
வைத்திருக்கின்றேன்;
நீர் அளிக்கும் விடுதலையால்
என் இதயம் களிகூரும்.
நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், அவர் எனக்கு
நன்மை பல செய்துள்ளார். (தி.பா. 13)
மறைக்கல்வி உரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், இன்று, திருப்பாடல்களில் இறைவேண்டல் பற்றி சிந்திப்போம். திருப்பாடல் நூல், இறைவேண்டல்களின் மிகப்பெரும் கருவூலமாக நோக்கப்படுகின்றது. இறைவன் நமக்குத் தந்த வார்த்தைகளின் உதவியோடு எவ்வாறு அவரை நோக்கி செபிப்பது என்பது குறித்து திருப்பாடல்கள் நூல் நமக்கு கற்றுத்தருகிறது. வாழ்த்துரைத்தல், இறைஞ்சுதல், மகிழ்வுடன் நன்றியுரைத்தல், துயர்களிலிருந்தும் ஏமாற்றங்களிலிருந்தும் விடுதலைபெற விண்ணப்பித்தல் என்று, பல்வேறு மனித உணர்வுகளின் வண்ணக்கலவையை நாம் திருப்பாடல்களில் காண்கிறோம் இறைவன் நம் இறைவேண்டல்களுக்கு செவிமடுக்காதவராகச் செயல்படுவதில்லை, குறிப்பாக, நொறுங்கிய இதயங்களிலிருந்தும், துயர்நிறை ஆன்மாக்களிலிருந்தும் எழுப்பப்படும் வேண்டல்களை அவர் செவிகொடுத்துக் கேட்கிறார். “ஆண்டவரே, இன்னும் எத்தனை நாள்” என திருப்பாடல் ஆசிரியர் மீண்டும் மீண்டும் கேட்பதே, இதற்குச் சான்று. சோதனை, வேதனைகள் மத்தியிலும் நாம் எழுப்பும் குரலை இறைவன் செவிமடுப்பதோடு, அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதற்கு இந்த வார்த்தைகளே சான்று. இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துயர்கள் குறித்து நமக்காக அழும் அன்புத் தந்தையாம் இறைவன், நம் ஒவொருவருக்கும் தம் ஞானத்தின்படி, திட்டங்களை வகுத்துள்ளார். இவ்வாறு, நாம் இறைவேண்டல் குறித்த பயிற்சியில் வளர்வதற்கு வழிகாட்டுவதாக உள்ளன, ‘திருப்பாடல்கள்’. இறைவனின் வாக்குறுதிகளில் முழு நம்பிக்கையை உறுதி செய்கின்றன திருப்பாடல்கள். நம் வானகத்தந்தையின் இறைப்பராமரிப்புக்குரிய அக்கறையில், ஆழமான நம்பிக்கை கொள்ளும் வகையில், நம் இதயங்களை திறக்க உதவுகின்றன திருப்பாடல்கள். இறைவார்த்தையில் நம்பிக்கைகொண்டு நாம் இவ்வுலகில் மேற்கொள்ளும் நீண்ட நம்பிக்கை பயணத்தில், உறுதியுடன் சென்றிட தூண்டுபவைகளாக உள்ளன திருப்பாடல்கள்.
இப்புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், அங்கு குழுமியிருந்த பல குழுக்களுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலாச்சாரங்களிடையே கலந்துரையாடலை ஊக்குவிக்கும் குழுவுக்கும், போர்த்துக்கல்லில் ஒரு புதிய துறவு இல்லத்தை துவக்கச் செல்லவிருக்கும் Trappist துறவு சபையினருக்கும், உரோம் நகரின் Cecchignolaவிலுள்ள NATO இராணுவ பள்ளியில் பயிற்சி பெறுவோருக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை வழங்கினார். நோயுற்றோர், இளையோர், முதியோர், புது மணத்தம்பதியர் என்று அனைவரையும் நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாக எடுத்துரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
Source: New feed