ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தனர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11
ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர்.
இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார்.
அவர் எழுந்து நின்றார்.
இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார்.
அவரும் அப்படியே செய்தார்.
அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“அவரும் அப்படியே செய்தார்”
அது இரவு நேரம். ஒரு குடியிருப்பின் மேல்தளத்தில் சிறுவன் ஒருவன் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். தென்னங்கீற்றுகளால் வேயப்பட்டிருந்த அந்த மேல்தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது; சிறிதுநேரத்திற்குள்ளே தீயானது மேல்தளம் முழுவதும் பரவியது. இதனால் அவன் தப்பிக்க வழிதெரியாமல் அங்கும் இங்கும் ஓடினான்.
இதற்கிடையில் கீழ்த்தளத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சிறுவனுடைய தந்தை, மகன் அலறுகிற சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வெளியே ஓடிவந்தார். வெளியே வந்தபின் மேல்தளத்தில் பார்த்தவர் ஒரு கணம் அதிர்ந்துபோனார். காரணம், மேல்தளத்தில் தீயும் புகைமூட்டமுமாக இருந்தன. அதற்கு நடுவில் மகன் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு, “அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்”, “அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்திக்கொண்டிருந்தான்.
“மகனே! அப்படியே மேலிருந்து கீழே குதித்துவிடு… நான் உன்னைப் பாத்திரமாகப் பிடித்துக் கொள்கிறேன்” என்று மகனை நோக்கிக் கத்தினார் காட்டினார் தந்தை. “அப்பா! நீ எங்கிருக்கின்றாய் என்றே எனக்குத் தெரியவில்லை. அப்படியிருக்கையில் நான் எங்கு குதிப்பது?” என்று ஒருவிதமான பயத்தோடு சொன்னான் மகன். “மகனே! நான் இருப்பது உனக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்… ஆனால், நீ இருப்பது எனக்கு நன்றாகவே தெரிகின்றது. அதனால் பயப்படாமல் கீழே குதி. அப்பா உன்னைப் பாத்திரமாகப் பிடித்துக் கொள்கிறேன்” என்றார்.
தன் அப்பா சொன்ன இவ்வார்த்தைகட்கு கீழ்ப்படிந்து, அவர்மீது உறுதியான நம்பிக்கை வைத்து, சிறுவன் கீழே குதித்தான். கீழே இருந்த அவனுடைய அப்பாவோ, அவனைப் பத்திரமாகப் பிடித்துக் கீழே இறக்கினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் எப்படி தன் தந்தையின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதற்குக் கீழ்ப்படிந்து கீழே குதித்ததனால் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டானோ, அது போன்று இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவர் சொன்னவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் குணம்பெறுகின்ற ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் இயேசுவின்மீது கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
குற்றம் காணும் நோக்குடன் இருந்த பரிசேயக்கூட்டம்.
நற்செய்தியில், இயேசு ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பிக்கின்றார். இதை அவர் ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு ஓய்வுநாள் அன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார் என்று நற்செய்தியில் ஒருசில இடங்களில் வருகின்றன (லூக் 4: 15, 5:17). இன்றைய நற்செய்தியிலும் அவர் ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பிக்கின்றார். ஆனால், தொழுகைக்கூடத்திலிருந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசு அங்கிருந்த வலக்கை சூம்பிய ஒருவரை குணப்படுத்துவாரா? அதன்மூலம் அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறுவாரா? என்று அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
‘இயேசு வலக்கை சூம்பிய மனிதரைக் குணப்படுத்தமாட்டாரா? அவருடைய வாழ்க்கையில் நல்லது பிறக்காதா?’ என்று நினைக்காமல், அதற்கு நேர் எதிராக மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் நினைப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. இன்றைக்கும்கூட ஒருசிலர் அடுத்தவர் எப்போது தவறு செய்வார்? அவரை எப்படிச் சிக்கலில் மாட்டிவிடலாம்? என்று அலைவதைக் காணமுடிகின்றது. இப்படிப்பட்டோர் தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி, நல்லதொரு வழியில் நடப்பது சிறந்தது.
ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையினாலும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்ததாலும் குணம்பெறுதல்
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவிடம் எப்படிக் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று இருக்கும்போது, கைசூம்பிய மனிதரோ ஆண்டவர் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதற்கெல்லாம் அப்படியே கீழ்ப்படிந்து நடக்கின்றார். குறிப்பாக இயேசு அந்த மனிதரைப் பார்த்து, ‘எழுந்து நடுவே நில்லும்’, ‘உமது கையை நீட்டும்’ என்று சொல்வதற்கு அப்படியே கீழ்ப்படிந்து நடக்கின்றார். அதனால் இயேசு அந்த மனிதரை நலப்படுத்துகின்றார்.
நற்செய்தியில் வருகின்ற இந்த வலக்கை கைசூம்பிய மனிதர் நமது கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இவர், இயேசு சொல்வதற்கெல்லாம் நான் ஏன் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றெல்லாம் இருக்கவில்லை. மாறாக, இவர் இயேசுவின் வார்த்தைகட்கு அப்படியே கீழ்ப்படிந்து நடக்கின்றார்; அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இருக்கின்றது. இந்த நம்பிக்கையும் கீழ்ப்படிதலுமே அவர்க்கு நலத்தைத் தருகின்றன. இந்த நிகழ்வைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற நாம், இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றோமா? சிந்திப்போம்.
Source: New feed