இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில்
இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————-
லூக்கா 9: 1-6
ஆண்டவரை நம்பி அவரது பணியைச் செய்வோம்
நிகழ்வு
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய புனிதை இயேசுவின் புனித தெரசா.
ஒருமுறை இவர் அனாதைக் குழந்தைக்கு ஓர் இல்லம் கட்ட நினைத்தார். ஆனால், இவருடைய கையில் இருந்ததோ மூன்று ஷில்லிங்க்ஸ்தான். ‘அனாதை இல்லம் மிக விரைவாகக் கட்டி முடிக்கப்பட வேண்டும்; கையில் இருப்பதோ மூன்று ஷில்லிங்க்ஸ்; இதைக் கொண்டு எப்படி அனாதை இல்லத்தை மிக விரைவாகக் கட்டி முடிப்பது…?’ என்று இவர் யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது, இவருக்கு அறிமுகமான ஒருவர் இவரிடம், “மூன்று ஷில்லிங்க்சை வைத்துக்கொண்டு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் கையில் போதிய பணம் வந்ததும், அனாதை இல்லத்தைக் கட்டத் தொடங்குங்கள்!” என்றார்.
இதற்கு இயேசுவின் புனித தெரசா, “தெரேசாவாகிய என்னால் இந்த மூன்று ஷில்லிங்க்சை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாதுதான்; ஆனால், ஆண்டவரின் துணையால் இதை வைத்துக்கொண்டு எவ்வளவு பெரிய செயல்களையும் என்னால் செய்ய முடியும்” என்று நம்பிக்கையோடு சொன்னார்.
இவர் இவ்வாறு சொல்லிவிட்டுத் தன்னிடமிருந்த மூன்று ஷில்லிங்க்சைக் கொண்டு அனாதை இல்லம் கட்டும் வேலையைத் தொடங்கினார். இவர் செய்யத் தொடங்கிய இந்த வேலையைப் பார்த்துவிட்டுப் பலரும் இவருக்கு மனமுவந்து பண உதவியும், பொருள் உதவியும் செய்துவிட்டுப் போனார்கள். இதனால் இவர் நம்பிக்கையோடு சொன்னது போன்றே, அனாதை இல்லம் மிக விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டது.
ஆம், கடவுளின் துணையால் நம்மால் எவ்வளவு பெரிய செயலையும் செய்ய முடியும். அதைத்தான் இந்த நிகழ்வு நமது எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், இறைப்பணியை நம்முடைய சொந்த ஆற்றலை நம்பி அல்ல, இறைவனை நம்பிச் செய்யவேண்டு என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்!
தான் தொடங்கிய இறையாட்சிப் பணி, தனக்குப் பின்னும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்பிய இயேசு, பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தார்; மட்டுமல்லாமல், அவர் அவர்களுக்கு பல்வேறுவிதமான பயிற்சிகளையும் கொடுத்தார் (லூக் 6: 13-16) இப்படி இயேசுவால் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட பன்னிருவரும் இன்றைய நற்செய்தியில் பணித்தளங்களுக்கு அனுப்பப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம்.
இயேசு பன்னிருவரையும் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்குச் சொல்லக்கூடிய முதன்மையான அறிவுரை: “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எடுத்துக் கொண்டு போகவேண்டாம்” என்பதாகும். இயேசு இவ்வாறு சொல்வதில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, இறைப்பணியைச் செய்யக்கூடிய ஒருவர் அவரை நம்பிப் பணிசெய்ய வேண்டுமே ஒழிய, பணத்தையோ அல்லது பொருளையோ அல்லது இன்ன பிறவற்றையோ நம்பிப் பணிசெய்யக் கூடாது. இரண்டு, வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவர் என்பதால் எதையும் எடுத்துக்கொண்டு போகத் தேவையில்லை (மத் 10: 10). இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறையடியார்கள் எந்த மக்களிடம் பணிசெய்கின்றார்களோ, அந்த மக்கள் இறையடியார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவர்களின் கடமையாகும். அதனால்தான் இயேசு எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் எனச் சொல்கின்றார்.
ஏற்றுக்கொண்டால் ஆசி, இல்லையென்றால் தண்டனை
இயேசு பன்னிருவரையும் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்குக் கூறுகின்ற இரண்டாவது அறிவுரை, மக்கள் உங்களை எந்த நகரில் ஏற்றுக்கொள்கின்றார்களோ, அந்த நகரில் தங்கிப் பணிசெய்யுங்கள். ஒருவேளை மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வந்துவிடுங்கள்.
ஆம், கடவுளின் வார்த்தை, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தி என்பது கடவுள் மனிதர்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய கொடை. அக்கொடையை ஒருவர் ஏற்றுக்கொண்டால் ஆசி, இல்லையென்றால் தண்டனை. ஆதலால், இறையடியார்கள் அறிவிக்கின்ற நற்செய்தியை இறைவனுடைய செய்தி என உணர்ந்து, அதனை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால், அவர்களுடைய வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.
நாம் இறையடியார்கள் அறிவிக்கின்ற செய்தியை ஆர்வத்தோடு கேட்டு, அதன்படி வாழ்வதற்குத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4: 13) என்பார் புனித பவுல். எனவே, நாம் இறைவனுடைய பணியை அவரை நம்பிச் செய்வோம்; அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed