இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21
அக்காலத்தில்
இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————-
ஆண்டவருக்கு உவப்பளிப்பது எது?
பொதுக் காலத்தின் இருபத்து ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I நீதிமொழிகள் 21: 1-6, 10-13
II லூக்கா 8: 19-21
ஆண்டவருக்கு உவப்பளிப்பது எது?
சிறு வயதிலேயே பாடநூலில் இடம்பெற்றவன்:
மக்களுடைய பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிப்போகும் மனிதர்களைப் பற்றி நாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கலாம். இவர்களுக்கு நடுவில் கீழே கண்டுத்த பணத்தை அதற்கு உரியவரிடம் சேர்த்த பெருமை முகமது யாசின் என்ற சிறுவனைச் சேரும்.
ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர் குளம் பகுதியுள்ள சி.எஸ்.நகரைச் சேர்ந்தவர்கள் பாட்சா – அப்ரோஸ் தம்பதி. இவர்களுடைய இளைய மகன்தான் இந்த முகமது யாசின். இவன் சின்ன சோமூர் என்ற இடத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றான். இவன் கடந்த 2018, ஜூலை மாதத்தில் ஒரு நாள், மதியஉணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூடத்தை ஒட்டிய சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு கையில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பதைக் கண்டான்.
உடனே இவன் அதை எடுத்துக்கொண்டு வந்து தனது வகுப்பாசிரியரிடம் கொடுக்க, வகுப்பாசிரியர் அதனை அருகில் உள்ள காவல் நிலையில் ஒப்படைத்தார். முகமது யாசின் கீழே கண்டெடுத்த அந்தப் பணப்பையில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது மாணவனுடைய நேர்மையைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த காவல்துறை ஆய்வாளர் அவனை வெகுவாகப் பாராட்டினர். இதற்கு நடுவில் அவனைப் பற்றிய செய்த எங்கும் பரவ, தமிழ்நாடு பாடல்நூல் கழகம், இரண்டாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் அவனுடைய பெயரை இடம்பெறச் செய்தது.
கீழே கண்டெடுத்த பணத்தைத் தனக்கென வைத்துக் கொள்ளாமல், அதை உரியவரிடம் கொண்டு சேர்த்து, நேர்மைக்குப் பெரிய இலக்கணமாக திகழும் முகமது யாசின் என்ற சிறுவன் நமக்கெல்லாம் பெரிய முன்மாதிரி. இன்றைய இறைவார்த்தை நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நீதிமொழிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “பலி செலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்” என்கிறது. இன்றைக்குப் பலர் ஆண்டவருக்குப் பலி செலுத்திவிட்டால் போதும்; எப்படியும் வாழ்ந்துகொள்ளலாம் என நினைக்கின்றார்கள். உண்மையில் ஆண்டவருக்கு உவப்பளிப்பது நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆகும்.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உண்மையான உறவினர்கள் யார்? என்ற கேள்விக்குப் பதில் தருகின்றது. இயேசுவின் இரத்த உறவுகள்தான் அவருடைய உண்மையான உறவினர்களா? நிச்சயமாக இல்லை. இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி செயல்படுகிறவர்களே அவரது உண்மையான உறவினர்கள். அப்படியெனில், நாம் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தால், அல்லது இன்றைய முதல் வாசகம் சொல்வது போன்று நாம் நீதியோடும் நேர்மையோடும் நடந்தால் இயேசுவின் உண்மையான உறவினர்கள் ஆவோம். அப்போது கடவுளும் நம்மைக் குறித்து உவப்படைவார்.
சிந்தனைக்கு:
கடவுளின் வார்த்தையைக் கேளாமலும், அதன்படி நடவாமலும் இருப்போர் இயேசுவின் உண்மையான உறவினர்களாய் இருக்க முடியும்.
இயேசுவின் உறவினர்களாக இருப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நீதியோடும் நேர்மையோடும் நடப்பது கடினமானதுதானே அன்றி, இயலாதது அல்ல.
இறைவாக்கு:
‘நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?’ (மீக் 6:8) என்பார் மீக்கா இறைவாக்கினர். எனவே, நாம் நேர்மையோடும் இரக்கத்தோடும் தாழ்ச்சியோடும் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed