இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-50
அக்காலத்தில்
பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
இயேசு அப்பெண்ணை நோக்கி, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
“பாவ மன்னிப்பு”
பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை
I 1 திமொத்தேயு 4: 12-16
II லூக்கா 7: 36-50
“பாவ மன்னிப்பு”
பாவத்தை அகற்றும் ஆண்டவர்:
ஒருநாள்கூடத் தவறாமல் திருப்பலில் கலந்துகொள்ளும் ஒரு மூதாட்டியிடம் அவருடைய உறவுக்கார இளைஞன் ஒருவன், “பாட்டி! கடந்த காலத்தில் நீங்கள் செய்த பாவத்தை நினைவுபடுத்திச் சாத்தான் உங்களை அச்சுறுத்துவது உண்டா?” என்றான். “ஆமாம், அவ்வப்போது சாத்தான் என்னை அச்சுறுத்துவது உண்டு” என்றார்.
“அத்தகையே வேளைகளில் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இளைஞன் அடுத்த கேள்வியைக் கேட்டபோது, மூதாட்டி அவனிடம், “கிழக்கு திசை நோக்கி அதைப் போகச் சொல்வேன்” என்று நிதானமாகப் பதிலளித்தார். “ஒருவேளை கிழக்கு திசையைப் நோக்கிப் போன சாத்தான் உங்களிடம் திரும்பி வந்து, மீண்டுமாக உங்களை அச்சுறுத்தினால் அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றான் அவன். “நீ சொல்வது போல் கிழக்கு திசையை நோக்கிப் போன சாத்தான் என்னிடம் திரும்பி வந்து, மீண்டுமாக அச்சுறுத்தியது என்றால், அதை நான் மேற்கு திசையை நோக்கிப் போகச் சொல்வேன்” என்றார் மூதாட்டி.
“அப்படியும் சாத்தான் உங்களிடம் திரும்பி வந்து, உங்களை மீண்டுமாக அச்சுறுத்தியது என்றால், அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?” என இளைஞன் மூதாட்டியைப் பார்த்துக் கேட்க, அவர் அவனிடம், “கிழக்கு மேற்கு என்று அதை அங்கும் இங்கும் போகச் சொல்லிக்கொண்டே இருப்பேன்” என்றான். கடைசியாக இளைஞன் மூதாட்டியிடம், “கடந்த காலத்தில் நீங்கள் செய்த பாவத்தை நினைவுபடுத்திச் சாத்தான் உங்களை அச்சுறுத்தும்போது நீங்கள் ஏன் அதைக் கிழக்கும் மேர்குமாகப் போகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு மூதாட்டி மிகவும் பொறுமையாக, “மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்குக் கடவுள் என் குற்றங்களை என்னிடமிருந்து அகற்றிவிட்டார் (திபா 103: 12) என்பதால்தான் நான் அப்படிச் சொல்கின்றேன்” என்றார்.
ஆம், கடவுள் நம் குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றிவிட்டார். அதனால் நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நற்செய்தியில் இயேசு, பாவிப் பெண்ணின் குற்றத்தை மன்னித்து, அவருக்கு மீட்பளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது பற்றி நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கடவுளைப் போன்று பாவித்து, அவர்களுக்கு விருந்து உபசரிக்கவேண்டும் என்று இந்திய மரபு கூறுகின்றது. ஏறக்குறைய யூத மரபும் அதையேதான் உணர்த்துகின்றது. அதனால்தான் தன்னைத் தேடி வந்த மூன்று மனிதர்களுக்கு ஆபிரகாம் விருந்து உபசரித்ததால், அவரது முதிர்ந்த வயதில் குழந்தைப் பேறு கிடைக்கின்றது (தொநூ 18)
இப்படியிருக்கையில், இன்றைய நற்செய்தியில் இயேசுவை விருந்து அழைத்த பரிசேயர் ஒருவர், அவருடைய கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர்கூடத் தரவில்லை. ஒருவரை விருந்துக்கு அழைத்துவிட்டு, அவரது கால்களைக் கழுவுவதற்குக்கூட தண்ணீர் தராதது என்பது அவரை அவமதிக்கின்ற செயல். அத்தகைய செயலைப் பரிசேயர் இயேசுவுக்குச் செய்கின்றார்; ஆனால், அங்கே வருகின்ற பாவிப்பெண் ஒருவர் இயேசுவின் காலடிகளில் நறுமணத்தைலம் பூசி, அதைத் தம் கூந்ததால் துடைத்து, முத்தமிடுகின்றார். இதன்மூலம் அவர் தம் பாவத்திற்கு பரிகாரம் தேடுகின்றார். இயேசுவும் அவரது பாவத்தை மன்னித்து, அவருக்கு மீட்பளிக்கின்றார்.
“அன்பு தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் மன்னித்து மறக்கும்” (நீமொ 10: 12) என்பதுபோல், நற்செய்தியில் வரும் பெண்மணி, பாவம் செய்து கடவுளை விட்டு வெகுதொலைவு சென்றபின், தன் தவற்றை உணர்ந்து, பாவத்திற்குப் பரிகாரம் தேடியதும், இயேசு தன் அன்பினால் அவரை மன்னித்து, அவருக்கு மீட்பளிக்கின்றார். இயேசு, தான் நலப்படுத்திய அல்லது மன்னித்த எல்லாருக்கும் மீட்பளித்தரா என்றால், இல்லை. ஆனால், இந்தப் பாவிப் பெண்ணின் குற்றத்தை மன்னித்தது மட்டுமல்லாமல், அவருக்கு மீட்பளிகின்றார். நாமும் கூட பாவம் செய்து கடவுளை விட்டு வெகுதொலைவில் போயிருக்கலாம். ஆதலால், நாம் கடவுளின் பேரன்பை உணர்ந்து அவரிடம் திரும்பி வந்து, அவரோடு ஒன்றிணைந்து வாழ்வோம்.
Source: New feed