அச்சுறுத்திவரும் கொள்ளைநோயைப் போல இன்னும் பல ஆபத்துக்கள் சூழ்ந்துள்ள வேளையில், அன்னை மரியாவிடம் செபிக்கும் செபமாலையை, பக்தியுடன் சொல்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார்.
அக்டோபர் 7, இப்புதனன்று, புனித செபமாலையின் அன்னை மரியா திருநாள் சிறப்பிக்கப்பட்டதை, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, செபமாலை பக்திமுயற்சிக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்தில், மரியன்னையை நோக்கி எழுப்பப்படும் இந்த மன்றாட்டை அடிக்கடி பயன்படுத்த கேட்டுக்கொண்டார்.
இவ்வுலகம், போர்களால் சூழப்பட்ட வேளையில் அன்னை மரியா தோன்றி, செபமாலை வழியே, அந்த ஆபத்துக்களை நீக்க வழிதேடுமாறு கூறினார் என்பதை நினைவுறுத்திய திருத்தந்தை, தற்போது நிலவும் கொள்ளைநோய் ஆபத்திலிருந்தும் தப்பிக்க, செபமாலையை நாம் கையிலேந்துவோம் என்று விண்ணப்பித்தார்.
காண்பதற்கு எளிதாகத் தோன்றும் செபமாலை பக்தி முயற்சி, ஆண்டவரின் வாழ்வை, ஆழ்நிலை வடிவில், தியானிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அற்புத வழி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஓட்டோமான் படையினருக்கு எதிராக, கிறிஸ்தவ கடற்படை வீரர்கள், 1571ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி மேற்கொண்ட ஒரு மோதலில், மிகவும் வலிமைமிக்க ஓட்டோமான் கடற்படையினரை, எண்ணிக்கையிலும், வலிமையிலும் குறைந்திருந்த கிறிஸ்தவ கடல்படையினர் வென்றனர்.
அந்த நாள் முழுவதும், திருத்தந்தை புனித 5ம் பயஸ் அவர்கள், செபமாலையை செபித்தார் என்றும், அந்த வெற்றியையடுத்து, அக்டோபர் 7ம் தேதி, செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.
Source: New feed