சிறியோரின் பாதுகாப்பை மையப்படுத்தி, பன்னாட்டு கருத்தரங்கு நடைபெறுவதை அறிந்து, திருத்தந்தை தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
ஏப்ரல் 8, இவ்வியாழன் முதல், 10, இச்சனிக்கிழமை முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Massachusetts மாநிலத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கையொட்டி, பாஸ்டன் பேராயர் கர்தினால் ஷான் ஓ’மாலி (Sean O’Malley) அவர்களுக்கு, கர்தினால் பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
“நம்பிக்கையும் வளர்ச்சியும்: சிறார் பாலியல் கொடுமைகளைத் தடுப்பதும், குணமாக்குவதும்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், மனநல அறிஞர்கள், மேய்ப்புப்பணியில் புலமைப் பெற்றவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்வது குறித்து திருத்தந்தை தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதாக, கர்தினால் பரோலின் அவர்களின் செய்தி கூறுகிறது.
சிறார் அடையும் பாலியல் கொடுமைகளைக் குறித்த விழிப்புணர்வு இன்றைய உலகில் மிகவும் தேவையாக உள்ளது என்றும், இந்தக் கொடுமையைத் தடுக்க பல்வேறு தளங்களிலிருந்து வல்லுனர்கள் ஒன்றாக இணைந்துவந்து சிந்திப்பது, தகுந்த பலன்களை வழங்கும் என்று தான் நம்புவதாகவும், திருத்தந்தை, இச்செய்தியின் வழியே கூறியுள்ளார்.
கடவுளின் குழந்தைகள் அனைவருக்கும் உரிய மாண்பை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவோர் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்குவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
சிறாரின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஷான் ஓ’மாலி அவர்கள், இக்கருத்தரங்கின் துவக்க அமர்வில் ஆசியுரை வழங்குகிறார் என்றும், இக்கருத்தரங்கின் மற்றோர் அமர்வில், சிறாருக்கு நிகழும் கொடுமைகளைத் தடுக்க மத நம்பிக்கையாளர்கள் எவ்விதம் உதவமுடியும் என்பது குறித்து, சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich அவர்கள், உரை வழங்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Source: New feed