![](https://www.addaikalanayaki.com/wp-content/uploads/2021/01/fhfgh.jpg)
இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22
அக்காலத்தில்
இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
“கடவுளின் அன்பு செலுத்துவோர் மனிதர்களிடமும் அன்பு செலுத்தவேண்டும்”
பிச்சைக்காரர்களிடம் அன்புகாட்டிய அரசி
ஜான்சி என்ற நாட்டை ஆட்சி செய்தவர் இராணி இலட்சுமி பாய். ஒருநாள் இவர் கோயிலுக்குச் சென்று, கடவுளை வழிபட்டுவிட்டு அமைச்சரோடு திரும்பி வந்துகொண்டிருக்கும்பொழுது, வித்தியாசமான குரல் கேட்டு, அமைச்சரிடம், “அது என்ன குரல்?” என்று அறிந்துகொண்டு வரச் சொன்னார். அமைச்சரும் அரசியின் ஆணைக்கிணங்க சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்று, என்னவென்று பார்த்தார். அங்கு ஒருசில பிச்சைக்காரர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதை அமைச்சர் அரசியிடம் சொன்னதும், அரசி அவரிடம், “நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதா? இது எவ்வளவு பெரிய அவமானம்! நம் நாட்டில் உள்ள எல்லாப் பிச்சைக்காரர்களுக்கும் அங்கியும் போயும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார். மூன்று நாள்களுக்குள் அரண்மனையில் போர்வைகளும் அங்கிகளும் வந்து குவிந்தன. அரசி அந்தப் போர்வைகளையும் அங்கிகளையும் நாட்டில் இருந்த பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்க, அவர்கள் அவற்றை அன்போடு பெற்றுக்கொண்டு, அரசியை மனதார வாழ்த்திவிட்டுச் சென்றார்.
ஜான்சி நாட்டு அரசி இராணி ஆண்டவரிடம் எந்தளவுக்கு அன்பு கொண்டிருந்தாரோ, அந்தளவுக்கு தன் நாட்டில் இருந்த பிச்சைக்காரர்களிடம் அன்பு கொண்டிருந்தார். இன்றைய இறைவார்த்தை ஆண்டவரிடமும் அடுத்தவரிடம் அன்பு கொள்ள அழைக்கின்றது.
விவிலியப் பின்னணி:
திருத்தூதர் புனித யோவான், உண்மையான அன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து இன்றைய முதல் வாசகத்தில் பேசுகின்றபொழுது, கடவுளை எந்தளவுக்கு அன்பு செய்கின்றோமா, அந்தளவுக்கு மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்கின்றார். ஒருவேளை கண்முன்னே உள்ள மனிதரை அன்பு செய்யாமல், கண்ணுக்குப் புலப்படாத கடவுளை ஒருவர் அன்பு செய்வதாகச் சொன்னால் அவர் பொய்யர் என்கின்றார். நற்செய்தியில் இயேசு, நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்திற்கு வந்து, ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோர் விடுதலை… என்று எழுதப்பட்டிருந்த இறைவாக்கினர் எசாயாவின் ஏட்டுச் சுருளை வாசித்துவிட்டு, நீங்கள் கேட்ட மறைநூல் இன்று நிறைவேறிற்று” என்கின்றார். அது முதல் அவர் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள்மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு இறைமனித அன்பிற்கு எடுத்துக்காட்டாகின்றார்.
சிந்தனைக்கு:
“கடவுளை அடைய எளிய வழி மனிதர்களை அன்பு செய்வது” – விவேகாந்தர்.
“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத் 25: 10) என்ற இயேசுவின் வார்த்தையை நம்முடைய வாழ்வில் உணர்ந்திருக்கின்றோமா?
இயேசுவைப் போன்று இறைமனித அன்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவோம்.
ஆன்றோர் வாக்கு:
‘அன்பு வார்த்தைகளில் அல்ல, செயல்களில் வெளிப்பட வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் நம்முடைய அன்பை இயேசுவைப் போன்று செயலில் வெளிப்படுத்துவோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed