விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17, 23-25
அக்காலத்தில்
யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:
“செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப் பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”
அதுமுதல் இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 4: 12-17, 23-25
விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்த இயேசு
நிகழ்வு
குருவானவர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய பகுதியில் மிகவும் வறிய நிலையில் இருந்த ஒரு பெண்மணிக்கு உதவலாம் என்று அந்தப் பெண்மணிக்கு வேண்டிய அரிசி, பருப்பு, காய்கறிகள்… இவற்றோடு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றார். இவர் அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றிருந்த நேரம், அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் வீட்டிற்குள் அந்தப் பெண்மணி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் கதவைத் தட்டிப்பார்த்தார். உள்ளிருந்து சத்தம் வரவில்லை. மீண்டுமாகத் தட்டிப் பாத்தார். அப்பொழுதும் சத்தம் வராததால், தான் கொண்டுவந்த பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றார் குருவானவர்.
இது நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து, குருவானவர் அந்தப் பெண்மணியைக் கோயிலில் சந்தித்தார். அப்படிச் சந்திக்கும்பொழுது, அந்தப் பெண்மணியிடம், “அம்மா! இரண்டு வாரங்களுக்குமுன்பு நான் உங்களைச் சந்திக்க உங்களுடைய இல்லத்திற்கு ஒருசில பொருள்களோடு வந்திருந்தேன். அப்பொழுது வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவை ஓரிரு முறை தட்டிப்பார்த்தேன். அப்படியிருந்தும், உள்ளிருந்து உள்ளேயிருந்து சத்தம் வராததால், அப்படியே திரும்பி வந்துவிட்டேன்” என்றார்.
குருவானவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்தப் பெண்மணி, “சுவாமி! நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகின்றபொழுது, நான் உள்ளேதான் இருந்தேன்; ஆனால், வீட்டு உரிமையாளர்தான் வாடகைப் பணம்கேட்டு, கதவைத் தட்டுகின்றார் என்று நினைத்துக்கொண்டு, கதவைத் திறக்கவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று வருத்தத்தோடு சொன்னார்.
இந்த நிகழ்வினைச் சுட்டிக்காட்டிப் போன்று பேசுகின்ற, மிகப்பெரிய மறையுரையாளரான சார்லஸ் ஸ்பெர்ஜன், “ஆண்டவர் இயேசு நற்செய்தி என்ற கொடையினை இலவசமாகத் தர வருகின்றார். யாரெல்லாம் அதனைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அவர் எல்லாவிதமான ஆசியையும் தருகின்றார்” என்பார். ஆம், இயேசுவின் நற்செய்தியை யாரெல்லாம் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டார்களோ, அவர்களெல்லாம் அவரிடமிருந்து ஆசியைப் பெற்றார்கள்.
நற்செய்தியில் இயேசு பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த நற்செய்தியைப் பணி மக்கள் நடுவில் எத்துணை முக்கியத்தும் வாய்ந்தது, அது மக்கள் நடுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பிற இனத்து மக்களுக்கு நற்செய்தி அறிவித்த இயேசு
திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேள்விப்படும் இயேசு கலிலேயாவிற்கு சென்று, செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைத்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று, குடியிருக்கத் தொடங்குகின்றார். செபுலோன் நப்தலி ஆகிய பகுதிகள் பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த பகுதிகள். இப்பகுதிகள் அசிரியர்களின் படையெடுப்பின்பொழுது, தாக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போயின (யோசு 19: 10-16, 32:39). ஆண்டவர் இயேசு அப்பகுதிகளுக்குச் சென்று, நற்செய்தியை அறிவிக்கின்றார். இதன்மூலம் இறைவாக்கினர் எசாயா உரைப்பது போன்று (எசா 9: 12) காரிருளில் நடந்த வந்த மக்களைப் போரொளி காணச் செய்கின்றார்; சாவின் நிழல் சூழ்ந்திருந்த நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதிக்கச் செய்கின்றார்.
மனமாற்றத்திற்கு அழைத்த இயேசு
தன் சொந்த ஊரான நாசரேத்தை விட்டு, பிற இனத்து மக்கள் நடுவில் நற்செய்திப் பணிசெய்யத் தொடங்கிய இயேசு, “மனம் மாறுங்கள், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்று போதிக்கத் தொடங்குகின்றார் .
ஏற்கெனவே திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்திற்கு வந்து, “மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்றுதான் (மத் 3:2) அறிவித்து வந்தார். இப்பொழுது இயேசு, திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனமாற்றச் செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கத் தொடங்குகின்றார். இயேசு அறிவித்த இந்தச்செய்தி கேட்டுப் பலர் மனம்மாறியிருக்க வேண்டும். சொல்லப்போனால், விண்ணரசில் நுழைவதற்கு மக்கள் யாவரும் மனம்மாற்றம் பெற்று, புதிய வாழ்க்கை வாழ்வது மிகவும் இன்றியமையாததாகும்.
இயேசு மக்களுக்கு நற்செய்தியை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து நோயாளர்களை நலப்படுத்தி, அவர்களுக்குப் புதியதொரு வாழ்வினைக் கொடுக்கின்றார். இவ்வாறு இயேசு வாழ்வின் ஊற்றாக விளங்குகின்றார். இயேசு செய்த நற்செய்திப் பணியும் நலப்படுத்தும் பணியும் மக்களுக்கு வாழ்வு கொடுத்ததுபோல, இருளில் இருந்தவர்களுக்கு ஒளி கொடுத்ததுபோல, நாமும் இருளில் இருப்பவர்களுக்கு ஒளியாக இருப்பது தேவையான ஒன்றாகும். நாம் இருளில் இருப்பவர்களுக்கு நம்முடைய வார்த்தையால், வாழ்வால் ஒளியாக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு’ (1 கொரி 9: 16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவித்து உலகிற்கு ஒளியாக விளங்கியதுபோல், நாம் ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து உலகிற்கு ஒளியாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed