கோவிட்-19 கொள்ளைநோயால் இத்தாலி நாடு பாதிப்படையத் துவங்கிய காலத்திலிருந்து, தன் நூலக அறையிலிருந்தே, புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாத கோடை விடுமுறைக்குப்பின், ஆகஸ்ட் 5ம் தேதி, தன் நூலக அறையிலிருந்தே மறைக்கல்வி உரையைத் துவக்கினார். ‘உலகை குணமாக்கும்’ என்ற தலைப்பில், புதிய ஒரு தொடரை அந்நாள் மறைக்கல்வியுரையில் ஆரம்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன், ஆகஸ்ட் 12ம் தேதியன்று, கொள்ளைநோய் காலத்தில் மனித மாண்பு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடவுள் மனிதனைப் படைத்தது குறித்த ஒரு பகுதி, தொடக்க நூலிலிருந்து முதலில் வாசிக்கப்பட்டது
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்;
கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்,” என்றார்…………
ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். (தொடக்க நூல் 1, 27-28. 2,15)
மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, திருஅவையின் சமூகப் படிப்பினைகளின் ஒளியில், தற்கால கொள்ளைநோயின் பாதிப்புக்கள் குறித்து, மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியாக இன்று நாம், மனித மாண்பு என்ற அடிப்படைக் கருத்தைச் சிந்திப்போம். ஒரு பொய்யான, தன்னல சார்புடைய எண்ணப்போக்கு, மனித மாண்பையும், மனித உறவுகளையும் மறுத்து, மனிதர்களை நுகர்வுப் பொருட்களாக நடத்தி, பயன்படுத்தித் தூக்கியெறியும் கலாச்சாரம் ஆகியவை (நற்செய்தியின் மகிழ்வு – Evangelii Gaudium, 53), நம் சமூகங்களில் பரவி வருவது குறித்து, இந்த கொள்ளைநோய் நமக்கு விழிப்புணர்வைத் தந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, நாம் இறைவனின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை நம் விசுவாசம் நமக்கு எடுத்துரைக்கிறது. இறைவனுடன் ஒன்றித்து வாழ்வதற்கும், ஒருவர் ஒருவரையும், படைப்பனைத்தையும் அன்புகூரவும் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். உண்மை சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கும் இயேசு, சீடத்துவம் என்பது, இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, பிறர்நலச் சேவையில் நமது வாழ்வை செலவிடுவதாகும் என்பதைக் காட்டுகிறார். கடவுள் வழங்கிய மாண்பும், அதிலிருந்து பிறப்பெடுக்கும் உரிமைகளும், சமூக வாழ்வின் அடிப்படையாக இருந்து, சமூக, பொருளாதார, மற்றும், அரசியல் உட்பொருட்களில் பாதிப்பைக்கொண்டுள்ளன. இந்த கொள்ளைநோயை எதிர்கொண்டு பதிலுரைக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், நற்செய்திக்கு எதிராகச் செல்லும் மனித மாண்பு மீறல்களை எதிர்த்துப் போராடுவதோடு, மனித குலமனைத்தின் நலனுக்காகவும், பொது இல்லமாகிய நம் இவ்வுலகின் நல்வாழ்வுக்காகவும் உழைக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை, இத்தொற்று நோய்க்காலத்தில் மனித மாண்பு குறித்த சிந்தனைகளுடன் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவைச் சிறப்பிக்க நம்மைத் தயாரித்துவரும் இவ்வேளையில், உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அன்னை மரியாவின் தாய்மைக்குரிய பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன், எனக்கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
Source: New feed