தற்போது நிலவும் கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கத்தை மையப்படுத்தியும், நெருக்கடியான இக்காலத்தில், உலகைக் குணமாக்க கிறிஸ்தவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் குறித்தும் தன் புதன் மறைக்கல்வி உரைகளில், ஒரு புதிய தொடரை, ஆகஸ்ட் 5ம் தேதி, கடந்த புதனன்று துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதையொட்டி இப்புதனன்று வழங்கிய ஒரு கருத்தை, தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்.
தொற்றுக்கிருமி மட்டும் நோய் அல்ல
“கொரோனா தொற்றுக்கிருமி மட்டும் நாம் போராடவேண்டிய நோய் அல்ல, மாறாக, இந்த உலகளாவிய கொள்ளைநோய், சமுதாயத்தில் நிலவும் தீமைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அடுத்தவரின் மாண்பை அலட்சியப்படுத்தும் தாறுமாறான கண்ணோட்டம், நம் சமுதாயத் தீமைகளில் ஒன்று” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
மேலும், ஆகஸ்ட் 12, இப்புதன் மறைக்கல்வி உரைக்குப் பின், ஆகஸ்ட் 15, வருகிற சனிக்கிழமை சிறப்பிக்கப்படவிருக்கும் அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னையின் பரிந்துரையால், மனித சமுதாயம், இந்த கொள்ளைநோயின் தாக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற வேண்டுதலையும் எழுப்பினார்.
போலந்து நாட்டின் “விஸ்துலா புதுமை”
அன்னையைக் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட வேளையில், போலந்து நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன், அன்னை மரியாவின் பரிந்துரையால் நடைபெற்ற “விஸ்துலா புதுமை”யைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, போலந்து மக்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
1920ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, போலந்து இராணுவம், வார்சா போரில், சோவியத் படையை முறியடிக்க, அன்னையின் துணையை நாடியதால் வெற்றிபெற்றனர் என்பதும், இந்த வெற்றியையொட்டி, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 15ம் தேதி, அந்நாட்டில், போலந்து இராணுவ நாள் சிறப்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.
மேலும், விண்ணேற்பு அடைந்த அன்னை மரியாவை தங்கள் பாதுகாவலராகக் கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டு மக்களுக்கும், இப்பெருவிழாவைச் சிறப்பிக்கும் அனைத்து நாடுகளுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Source: New feed