டிசம்பர் 25, வருகிற சனிக்கிழமையன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கவிருக்கிறோம். இப்பெருவிழாச் சூழலில் உரோம் மாநகருக்கு வருகைதரும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. டிசம்பர் 22, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறைக்கல்வியுரையைக் கேட்பதற்கும் திருப்பயணிகள் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் இயேசுவின் பிறப்புபற்றிய தன் எண்ணங்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதன் மறைக்கல்வியுரை நிகழ்வில், இயேசுவின் பிறப்புபற்றி லூக்கா நற்செய்தியிலிருந்து ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டது.
அக்காலத்தில், வானதூதர், வயல்வெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.(லூக்.2,10-12) அந்நற்செய்திப் பகுதி வாசிக்கப்பட்டவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்மஸ்க்கு முந்திய இந்நாள்களில், நம் மீட்பரின் பிறப்பைச் சூழ்ந்துள்ள நிகழ்வுகள் குறித்து சிந்திப்போம். இந்நிகழ்வு, அனைத்திற்கும் மேலாக, எளிமை மற்றும், தாழ்ச்சியால் குறிக்கப்பட்டுள்ளது. கடவுளின் அன்புத் திட்டத்தில், இந்தப் பாதையைத்தான், மரியாவும், யோசேப்பும் தெரிவுசெய்தனர். அவர்கள் இருவரும் சாதாரண நகரான பெத்லகேமுக்கு, கீழ்ப்படிதலோடு பயணம் மேற்கொண்டனர். புதிதாகப் பிறந்த பிள்ளை கிறிஸ்துவை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்துவதற்குத் தாழ்ச்சியோடு ஏற்றனர் (காண்க லூக்.2:1-7). சமுதாயத்தில் தாழ்நிலையில் இருந்த இடையர்களே, இறைமகன் மனிதஉரு எடுத்ததற்கு முதல் சாட்சிகள். கீழ்த்திசை ஞானிகள், பொருளாதார அளவில் ஏழைகளாய் இல்லாவிடினும், எல்லா நாடுகளுக்கும் கடவுளின் அன்பை வெளிப்படுத்திய குழந்தையான அரசரின் முன்பாக அவர்களும் தங்களைத் தாழ்த்தினர். தம்மை ஏழைகளோடு சிறப்பானமுறையில் ஒன்றித்துக்காட்டிய புதிதாகப் பிறந்துள்ள கிறிஸ்துவை வணங்குவதற்கு அனைத்து மனிதரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில், ஏழைகள், கிறிஸ்துவின் அருளடையாளங்கள் என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் நமக்குக் கற்பித்து இருக்கிறார். நம் பிறரன்புப் பணிகளில், ஏழைகளை அன்புகூரவும், அவர்களுக்கு உதவிசெய்யவும் நாம் அழைக்கப்பட்டுள்ளவேளை, இறையாட்சியின் நிச்சயமான பாதையை, அதாவது தாழ்ச்சியை நமக்குச் சுட்டிக்காட்டி உதவுகின்றவர்கள் ஏழைகளே எனவும் (காண்க.மறையுரை,1,மே,1969) அத்திருத்தந்தை கூறியுள்ளார். மனுஉருவான வார்த்தையில் கடவுள் நமக்கு வெளிப்படுத்தியுள்ள எல்லையற்ற அன்பை தாழ்ச்சியோடு ஏற்பதன் வழியாக, இந்த கிறிஸ்மஸ் பெருவிழாவில் குழந்தை இயேசு கொணர்ந்த குணப்படுத்தல், மகிழ்ச்சி மற்றும், அமைதியை அனுபவிப்போமாக.
இவ்வாறு இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பாவில் புகலிடம்தேடி வருகின்ற புலம்பெயர்ந்தோரின் வாழ்வும், மாண்பும் பாதுகாக்கப்படுவதற்கு, உறுதியான தீர்வுகளைக் காண, ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், மற்றும், அதிகாரிகளுக்கு இடையே ஒன்றிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுமாறு உருக்கமாக அழைப்புவிடுத்தார். அதற்குப்பின்னர், அனைத்துத் திருப்பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைக்கப்படுமாறு செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed