வரலாற்று சிறப்பு மிக்க கரக்கோஷ் (Qaraqosh) நகரையும், அங்கு வாழும் மக்களையும், திருத்தந்தை, தன் செபங்களில் நினைவுகூர்ந்து வருகிறார் என்றும், அம்மக்களுக்கு அவர் தன் ஆசீரையும் வாழ்த்துக்களையும் அனுப்பியுள்ளார் என்றும், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், டிசம்பர் 28, இவ்வெள்ளியன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.
டிசம்பர் 24ம் தேதி முதல், 28ம் தேதி முடிய, ஈராக் நாட்டில், தன் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்ட திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இவ்வெள்ளியன்று, கரக்கோஷ் நகரின் சிரிய கத்தோலிக்க பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய வேளையில், தன் மறையுரையின் துவக்கத்தில், அந்நகர மக்களுக்கு, திருத்தந்தையின் வாழ்த்துக்களை வழங்கினார்.
இந்நகரில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவ சமுதாயம், தொன்று தொட்டு, தங்கள் நம்பிக்கையை மிகுந்த ஆர்வத்துடன் காப்பாற்றி வந்துள்ளனர் என்பதை இவ்வுலகம் அறியும் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், 2014ம் ஆண்டு முதல், இந்நகரில் நிகழ்ந்த கொடுமைகள், உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளன என்று குறிப்பிட்டார்.
புலம் பெயர்ந்து சென்ற திருக்குடும்பத்தைப் போல், இந்நகரில் வாழ்ந்த மக்களும் புலம் பெயர்ந்து செல்லும் நிலைக்கு உள்ளாயினர் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், அன்று முதல் இன்று வரை, வாழ்வைக் குலைக்க எழுந்துவரும் சக்திகளை, அன்பு என்ற சக்தி முறியடித்துள்ளது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
நமக்கு வழங்கப்பட்டுள்ள கிறிஸ்தவ நம்பிக்கை, மன்னிப்பில் தோய்ந்தது என்று தன் மறையுரையில் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த மன்னிப்பு, நம் குடும்பங்களில் துவங்கி, கத்தோலிக்க சமுதாயத்தில் பரவி, இறுதியில் நம்மைத் துன்பத்திற்கு உள்ளாக்கும் மற்றவர்களுக்கும் பரவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்து பிறப்பைச் சிறப்பிக்கும் இந்தப் புனித காலத்தில், ஈராக் நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் அமைதியையும், அன்பையும் வழங்குவாராக என்ற வேண்டுதலுடன் கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.
Source: New feed