கியூபா நாட்டு கத்தோலிக்க இளைஞர்களின் முயற்சியால், அந்நாட்டில் 24 மணி நேரமும் செயல்படும் முதல் கத்தோலிக்க இணையதள வானொலி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Radio El Sonido de la Esperanza” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதள வானொலி வழியாக, இளைஞர்கள், திருஅவையின் செய்தியை இணையதளம் வழியாகப் பரப்புவதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர்.
2019ம் ஆண்டு பிப்ரவரியில், RCJ எனப்படும் கத்தோலிக்க இளைஞர் இணையதள அமைப்பை ஆரம்பித்தவர் மற்றும் அதன் இயக்குனர்களில் ஒருவரான Rubèn de la Trinidad அவர்கள், இந்த கத்தோலிக்க இணையதள வானொலி பற்றிக் கூறுகையில், கியூபா நாட்டு கத்தோலிக்க சமுதாயத்தின் உறுப்பினர்கள், ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள உதவும் நோக்கத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும், கியூபா நாட்டு கத்தோலிக்கரை, வெளிநாடுகளுடன் தொடர்புபடுத்தவும், அவர்களிடையே பாலங்களைக் கட்டியெழுப்பவும், திருஅவையின் சமுதாயப் போதனைகளின்படி, இளைஞர்கள் கிறிஸ்தவ வாழ்வுக்குத் தங்களைத் தெளிவான முறையில் அர்ப்பணிக்க உதவவும், இந்த இணையதள கத்தோலிக்க வானொலியைத் துவக்கினோம் என்றும், ரூபன் அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.
கியூப கத்தோலிக்க இளைஞர் இணையதள அமைப்பு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆதரவுடன், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டகிராம், டெலகிராம், வாட்சப் போன்ற சமுதாய ஊடகங்கள் வழியாக, அந்நாட்டு கத்தோலிக்கருக்கு உதவி வருகிறது.
Source: New feed