கல்வி என்பது இரக்கம் நிறைந்த ஆன்மீகப்பணி எனவும், இக்கல்வியின் வழியாக கிறிஸ்து என்னும் ஒளியை நம்முள் நுழையச் செய்து உலகில் சுடர்விடும் ஒளியாக திகழுங்கள் எனவும் புனித தாமஸ் அக்குவினாஸ் நட்புறவின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனத்தார்க்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.
செப்டம்பர் 30, வெள்ளியன்று புனித தாமஸ் அக்குவினாஸ் நட்புறவின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த அனைவரையும் வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, கல்வி, மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் அர்த்தத்தை வழங்குகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
நம்பிக்கை, மற்றும் பகுத்தறிதலுக்கு இடையேயுள்ள இயற்கையின் இணக்கத்தை கண்டறிந்து, கடவுளோடு கொண்டிருந்த ஆழமான உறவிற்கு சான்றாக திகழும் புனித தாமஸ் அக்குவினாஸ்போல, இறைப்பிரசன்னத்தை உலக மனிதரில் காண, இதயத்தால் இணைக்கப்பட்டவர்களாக வாழ தொடர்ந்து செபிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
நம்பிக்கை, பகுத்தறிதல் என இரண்டும் ஒன்றிணைந்து செயல்படும்போது, ஆன்மநலம் வளம்பெற்று, வலுப்பெற்று திகழ்வதோடு மனித ஆற்றல்களான மனித நேயமும், உடன்பிறந்த உணர்வும் பெருகி, கடவுள் நிறைந்த உலகை நம்மால் உருவாக்க முடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
கல்வி என்பது அறிவைப் பகிர்தல், திறன்களை வளர்த்தல் போன்றவற்றோடு முடிவடைந்துவிடாது, கடவுள் பரிசாக கொடுத்துள்ள ஒவ்வொருவரின் தனிச்சிறப்புப்பண்புகள் என்னும் வைரங்களை பட்டை தீட்ட உதவுகின்றது எனவும், இதன் வழியாக இருளை அகற்றி ஒளியை பரவச்செய்யும் கடவுளின் ஒளியின் பங்குதாரர்களாக நாம் திகழ்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
Source: New feed