இத்தவக்காலத்தை நன்முறையில் பயன்படுத்தி, உண்மையான மனந்திரும்பலை நோக்கி இறை உதவியுடன் நடைபோடுவோம் என்ற விண்ணப்பதுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
‘இந்த தவக்காலம் வழங்கும் தகுந்த வேளையை நாம் வீணாக்காமல் இருப்போம். உண்மையான மனந்திரும்பல் நோக்கிய நம் பயணத்தில் உதவும்படி இறைவனை வேண்டுவோம்’ என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், மொராக்கோ நாட்டில் தான் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் 5 டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞாயிறன்று 3 டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை, ‘குறிப்பாக, வலுவிழந்தோர்மீது நாம் காட்டும் பிறரன்பு என்பது, பிறரை சந்திக்கும் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதில் நல்லதொரு வாய்ப்பு’ என முதல் டுவிட்டரிலும், ‘இறைத்தந்தையின் இதயத்தை குறித்து தியானிக்க இயேசு அழைக்கிறார், அத்தகைய கண்ணோட்டத்தின் வழியாகத்தான், நாமனைவரும் சகோதரர், சகோதரிகள் என்பதை மீண்டுமொருமுறை ஏற்றுக்கொள்ள முடியும்’ என இரண்டாவது டுவிட்டரிலும், ‘எனக்கு இனிய வரவேற்பளித்த மொராக்கா மக்களுக்கு என் நன்றியை வெளியிடுகிறேன். அருளும் இரக்கமும் நிறைந்த இறைவன் உங்களை பாதுகாத்து, மொராக்கா நாட்டை அசீர்வதிப்பாராக’ என தன் மூன்றாவது டுவிட்டரிலும் எழுதியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று தன் திருத்தூதுப் பயணத்தின்போது திருத்தந்தை வெளியிட்டுள்ள இரு டுவிட்டர் செய்திகளில், ‘ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், நட்பின் கரங்களை நீட்டுவதற்கும் கொண்டுள்ள மனவுறுதியே, மனித குலத்தின் அமைதிக்கும் இணக்க வாழ்வுக்கும் உரிய பாதை’ என முதல் டுவிட்டரிலும், ‘நம் பொது இல்லமாகிய இவ்வுலகில் தங்களுக்குரிய சரியான இடத்தைக் கொண்டிருக்கவும், கனவு காணவும், வாழ்வதற்கும் உரிய உரிமையை ஒவ்வொருவரும் கொண்டுள்ளார்கள்’ என தன் இரண்டாவது டுவிட்டரிலும் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed