மனவருத்தம் கொண்டு, அல்லது, மற்றவரின் துன்பம் கண்டு கண்ணீர் வடிப்பது, நம் ஆன்மாவுக்கு நல்லது என்பதை, தன் மறையுரைகளிலும், செய்திகளிலும் வெளியிட்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 9, இப்புதனன்று மீண்டும் ஒருமுறை, கண்ணீர் வடிப்பதன் நன்மைகளை தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
“கடினமானச் சூழல்களைச் சந்திக்கும் வேளையில், கண்ணீர் வடிக்க அஞ்சவேண்டாம்: கண்ணீர் துளிகள், வாழ்வை வளப்படுத்துகின்றன. பரிவினால் உருவாகும் கண்ணீர், இதயங்களையும், உணர்வுகளையும் தூய்மையாக்குகிறது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப்பொறுப்பை ஏற்ற 2013ம் ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி, திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளன்று நிறைவேற்றிய திருப்பலியில், “சிலுவையின் மறைபொருளைப் புரிந்துகொள்ள, முழந்தாள்படியிட்டு செபிப்பதோடு, கண்ணீர் சிந்துவதும் உதவியாக இருக்கும். நாம் சிந்தும் கண்ணீர், இந்த மறைப்பொருளுக்கு அருகே நம்மை அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், போரினாலும், வன்முறைகளாலும் தங்கள் குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்காக கண்ணீர் சிந்தி செபிக்குமாறு, 2016ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி, “கண்ணீரைத் துடைக்க” என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற ஒரு செப வழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, பிலிப்பீன்ஸ் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், பல்வேறு கொடுமைகளிலிருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகளைச் சந்தித்தபோது, “கண்ணீரால் கழுவப்பட்ட கண்களைக் கொண்டு மட்டுமே, வாழ்வின் ஒரு சில கடினமான எதார்த்தங்களைக் காணமுடியும்” என்று, கூறினார்.
Source: New feed