புனிதர்களின் வாழ்க்கை இரகசியம் என்பது கடவுளோடு அவர்கள் கொண்டுள்ள பரிச்சயமான உறவும், கடவுள் மீது அவர்கள் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையுமே என்று தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 24 சனிக்கிழமை புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழாவைத் திருஅவை கொண்டாடி மகிழும் வேளையில் புனிதர்கள் என்ற ஹாஸ்டாக்குடன் தன் குறுஞ்செய்தியைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளோடு கொண்டுள்ள பரிச்சயமான உறவு மற்றும் நம்பிக்கையை, வாழ்க்கையின் இரகசியமாகக் கொண்ட புனிதர்கள், அப்பண்புகளோடு வளர்ந்து, கடவுளுக்கு விருப்பமானது எது என்பதை எளிதில் கண்டுணர்கின்றனர் என்றும், கடவுளோடு கொண்ட இந்த பரிச்சயமான உறவே கடவுளின் விருப்பம் நமது நலனுக்கு நல்லதல்ல என்ற பயத்தையும் சந்தேகத்தையும் நீக்குகின்றது என்றும் அக்குறுஞ்செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.