உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15
வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
I திருத்தூதர் பணிகள் 4: 13-21
II மாற்கு 16: 9-15
“கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க முடியாது”
கண்டதைத் துணிவோடு எடுத்துரைத்த அருள்பணியாளர்:
பிரான்ஸ் நாட்டை ஆண்ட பதினான்காம் லூயிஸின் அரண்மனையில் இறைவாக்கை அறிவித்து வந்தவர் இயேசுசபைத் துறவியான லூயிஸ் போர்தலோ (Louis Bourdaloue 1632-1704). இவர், மன்னர் வாழ்ந்துவந்த துன்மாதிரியான வாழக்கையைப் பார்த்து மிகவும் வேதனையடைந்தார். அதை அவரிடம் எப்படியாவது எடுத்துச்சொல்ல விரும்பினார் இவர்.
இதை முன்னிட்டு ஒருநாள் இவர் ஒரு கைகுட்டையில், ஒரு மனிதர் பாவம்செய்வது போன்றும், அந்தப்பாவத்திற்கு அவர் தண்டனை பெறுவதுபோன்றும் ஓவியமாக வரைந்து அதை மன்னரிடம் கொடுத்தார். மன்னர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, எந்தவொரு சலனமும் இருந்தார். இதனால் இவர், இறைவாக்கினர் நாத்தான் தாவீது மன்னரிடம் சொன்ன, “நீயே அந்த மனிதன்” (2 சாமு 12: 7) என்ற வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, “மாமன்னரே! நீர் இந்த நாட்டிற்கு மன்னராக இருக்கலாம்; ஆனால், மன்னருக்கெல்லாம் மன்னராக இருப்பவர் கடவுள். அதனால் நான் அவருக்கு அஞ்சி, அவருடைய வார்த்தைகளை எடுத்துரைக்கவேண்டும். எனவே நீர் உம்முடைய பாவத்தை விட்டுவிலகாவிட்டால், அதற்குரிய தண்டனையைப் பெறுவீர்” என்று மிகத்துணிச்சலாகச் சொன்னார். இதைக்கேட்டு மன்னர் பதினான்காம் ஒரு வினாடி ஆடிப்போனார்.
தவறு செய்தது மன்னனாகவே இருந்தாலும், அவனுக்கு அஞ்சாமல் அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டிய அருள்பணியாளர் லூயிஸ் போர்தலோ நமது கவனத்திற்குரியவர். முதல்வாசகத்தில் பேதுருவும் யோவானும், “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்கிறார்கள். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பேதுருவும் யோவானும் கால் ஊனமுற்றவரை எழுந்து நடக்கச் செய்ததைத் தொடர்ந்து பலரும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார்கள். இதனால் தலைமைச் சங்கத்தார் அவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம், “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்கின்றார். இதற்கு அவர்கள் இருவரும் சொல்லும் பதில்தான், “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்பதாகும்.
பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் தலைமைச் சங்கத்தார் முன்பாக அவ்வளவு துணிவோடு பேசக்காரணம் அவர்கள், தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டதாலேயே ஆகும் (திப 4: 8). மேலும் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில், “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” அவர்களிடம் சொல்லியிருப்பார். இதன்படி பேதுருவும் யோவானும் நற்செய்தியை அறிவிக்கின்றார்கள். எனவே, இவர்கள் இருவரைப் போன்று நாமும் தூய ஆவியாரின் துணையால் படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிப்போம்.
சிந்தனைக்கு:
கடவுள் நம் சார்பாக இருப்பதால் (உரோ 8: 31), யாருக்கும் அஞ்சாமல் நற்செய்தி அறிவிப்போம்.
நற்செய்தியை அறிவிக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் உண்டு (1 கொரி 9: 16).
துணிந்து எழும்போதும்தான் துன்பம் தூரப்போகும்.
இறைவாக்கு:
‘கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினை வழங்கியுள்ளார்’ (1 திமொ 1:7) என்பார் புனித பவுல். எனவே, கடவுள் நமக்களித்திருக்கும் வல்லமையுள்ள உள்ளத்தைக்கொண்டு, ஆண்டவரைப்பற்றித் துணிவோடு சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed