மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்கள்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42
அக்காலத்தில் இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார்.
யூதர்கள் அவரைப் பார்த்து, “ `உங்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றார்கள்.
அதற்கு இயேசு, “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்” என்றார்.
அவர்கள் அவரைப் பார்த்து, “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்” என்றார்.
அவர்கள், “நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்” என்றார்கள்.
இயேசு அவர்களிடம் கூறியது: “கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
யோவான் 8: 31-42
உண்மை விடுதலை அளிக்கும்
நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார். இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார். “தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?” என்று கேட்டார். “திருடச் செல்கிறேன்” என்றான் அவன். உடனே அரசர், “திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா?” என்று கேட்டார். “திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னைத் திருத்த முயற்சிசெய்தார். அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்து, ‘எப்போதும் உண்மையே பேச வேண்டும்’ என்று வாக்குறுதி வாங்கினார். அவர் நினைவாக அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்” என்றான் திருடன்
“தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். ஆனால், கிடைப்பதில் பாதிப் பங்கு எனக்கு தர வேண்டும்” என்றார் அரசர். அவனும் ஒப்புக் கொண்டான். பின்னர் அரண்மனைக் கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் அவர். கருவூலத்திற்குள் சென்ற அவன் இரண்டு வைரங்களுடன் வந்தான். “கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன… மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார். அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு, இரண்டை எடுத்து வந்தேன். உம் பங்கிற்கு ஒன்று” என்று ஒரு வைரத்தை அரசரிடம் தந்தான்.
மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர். பரபரப்புடன் அங்கே வந்த அமைச்சர், “அரசே! கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்றும் திருடு போய்விட்டன” என்றார். “மூன்று வைரங்களுமா திருடு போய்விட்டன?” என்று கேட்டார் அரசர். “ஆம். அரசே” என்றார் அமைச்சர். ‘திருடன் பொய் சொல்லி இருக்கமாட்டான்… எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடி இருக்க வேண்டும்’ என்று நினைத்த அரசர், வீரர்களை அழைத்து, “அமைச்சரைச் சோதனை இடுங்கள்” என்று கட்டளையிட்டார். வீரர்கள் அவர் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தனர். “வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடைய ஓர் இளைஞன் இருப்பான். அவனை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார். அவர்களும் அவனை அழைத்து வந்தனர்.
அரியணையில் வீற்றிருந்தவரைப் பார்த்தான் திருடன். நேற்றிரவு தன்னைச் சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான். ‘என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ’ என்று நடுங்கினான். “அமைச்சரே! இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாகவும் நடந்து கொண்டான். நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர், பொய் சொன்னீர். அதற்காக உம்மைச் சிறையில் அடைக்கிறேன்” என்றார். பின்னர் அவர் திருடனைப் பார்த்து, “இளைஞனே! இனிமேல் திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு. உன்னை அமைச்சராக நியமிக்கிறேன்” என்றார். “அரசே! வறுமையில் வாடியதால் திருடினேன். இனி திருட மாட்டேன்” என்றான் திருடன். அதன்பிறகு அவனை பாராட்டி, அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அரசர்.
ஒருவர் உண்மை பேசுவதால் அவருக்குக் கிடைக்கும் நன்மைகள் எத்தகையது என்பதை விளக்கச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்
நற்செய்தியில் இயேசு, யூதர்களிடம் பேசுகின்றபோது, “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்கின்றார். இங்கு இயேசு ‘உண்மை’ என்று குறிப்பிடுவதை அவரோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவா 14:6) என்று இயேசு தோமாவிற்குப் பதிலளிக்கும்போது கூறுவார். அப்படியானால் உண்மையும் இயேசுவும் வேறு வேறு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் யாராரெல்லாம் இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்கள் இயேசுவை அதாவது உண்மையை அறிந்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இயேசுவின்/ இறைவனின் வார்த்தைகளைக் கடைபிடிக்காமல் பாவத்திற்கு அடிமையானவர்கள்
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் என்று இயேசு சொன்னதும் யூதர்கள், “நாங்கள் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை… நாங்கள ஆபிரகாமின் மக்கள்” என்கின்றார்கள். யூதர்களின் இக்கூற்று எவ்வளவு பெரிய பொய் என்பதை பழைய ஏற்பாட்டைப் படித்துப் பார்த்தால் புரிந்துவிடும். யூதர்கள் ஏழுவிதமான அரசாங்கத்திடம் அடிமைகளாக இருந்தார்கள். அப்படியிருந்தும் அவர்கள், தாங்கள் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்று பெருமை பேசிக்கொள்கிறார்கள். மேலும் ஆபிராகம் எங்கள் தந்தை என்று சொல்லும் அவர்கள், ஆபிரகாமைப் போன்று அன்பாகவும் தோழமையோடும் இருக்கவில்லை (எசா 41:8). மாறாக இயேசுவைக் கொள்வதற்கு வழிதேடினார்கள். இவ்வாறு அவர்கள் உண்மையின் வழியில் – இயேசுவின் வழியில் – நடக்காமல், அவருக்கு எதிர்கச் செயல்பட்டு பாவத்திற்கு அடிமையானார்கள்.
யூதர்களைப் போன்று எவர் ஒருவர் உண்மையின் வடிவாய் இருக்கும் இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து நடக்காமல், தன் சொந்த விருப்பு வெறுப்பின் படி, மனம்போன போக்கில் நடக்கின்றாரோ அவர் பாவத்திற்கு அடிமை என்பது உண்மை.
சிந்தனை
‘அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்து போன்று நாம் எல்லாவற்றிலும் வளரவேண்டும்’ (4:15) என்பார் தூய பவுல். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் உண்மை பேசி, எல்லாவற்றிலும் உண்மையாய் இருந்து, உண்மையின் வடிவாய் இருக்கும் இயேசுவைப் போன்று ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்
Source: New feed