செவ்வாய், உலக எழுத்தறிவு நாள். மனித மாண்பிற்கும், உரிமைகளுக்கும் எழுத்தறிவு முக்கியம் என்பதை வலியுறுத்தி, 1967ம் ஆண்டிலிருந்து இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கல்விமுறை மாற்றப்படவேண்டியதில் கல்வியாளர்களின் பங்கை வலியுறுத்தி, இன்றைய கோவிட்-19 கொள்ளைநோய் சூழலிலும், இந்த உலக நாள் சிறப்பிக்கப்படும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான பிள்ளைகள், பள்ளியிலோ கல்லூரியிலோ காலடி எடுத்துவைக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இந்திய நடுவண் அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையும், ஏழைக் குழந்தைகளின் எழுத்தறிவுக்கு, அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்த கல்விக்கொள்கை குறித்து, செப்டம்பர் 07, இத்திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மாநில ஆளுனர்களைச் சந்திக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த சந்திப்பில், ஏழைக் குழந்தைகளின் வருங்காலம் கருதி நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என நம்புவோம்.
இளமையில் கல் (ஆத்திச்சூடி ), ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் (உலக நீதி) கல்வி கரையில, கற்பவர் நாள்சில (நாலடியார்), கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு, எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், கைப்பொருள்தனில் மெய்ப்பொருள் கல்வி (கொற்கை வேந்தன்) என்று நம் முன்னோர் சொல்லியுள்ளனர். கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் ஆணிவேர் என்றார் பிளேட்டோ. இளமைக் காலத்தில் கல்வியைப் புறக்கணித்தவர், இறந்த காலத்தை இழந்தவர், எதிர்கால வாழ்விலும் இறந்தவர் என்றார், யூரிபிடிஸ். பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது. கல்வி ஆபரணமல்ல, ஆடை. எனவே கல்வியின் அருமை பெருமைகளை அறிவோம். கல்வி கற்க வாய்ப்பில்லாத, வசதியில்லாத பிள்ளைகளுக்கு உதவுவோம். கோவிட்-19 சூழலில் கல்வி எழுத்தறிவிக்கும் ஆசான்கள் மற்றும், மாணவர்களுக்காக, வேளாங்கன்னி ஆரோக்ய அன்னையிடம் மன்றாடுவோம்
Source: New feed