வருகிற அக்டோபர் மாதத்தில் நாம் செபிக்கும் செபமாலையை உலகில் அமைதி நிலவ அர்ப்பணிப்போம் என்று, செப்டம்பர் 28, இப்புதன் பொது மறைக்கல்வியுரையின்போது அனைவரையும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதன் காலையில் 9.30 மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் ஆற்றிய பொது மறைக்கல்வியுரையில் போலந்து நாட்டுத் திருப்பயணிகளை வாழ்த்தியபோது இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகிற்கு அமைதி அவசியம் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
இன்னும், சில நாள்களில் செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தைத் தொடங்கவுள்ளோம். எனவே குழுமமாகவும், குடும்பமாகவும் செபமாலை செபிக்கும்போது உங்கள் கவலைகள், மற்றும், உலகின் தேவைகளை, குறிப்பாக, உலகில் அமைதி குறித்த தேவையை அன்னை மரியாவிடம் அர்ப்பணியுங்கள் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
Source: New feed