இக்காலத்தில், அதிர்ச்சியூட்டும் முறையில் அதிரித்துவரும் பல்லுயிர்கள் அழிவு, இயற்கைப் பேரிடர்கள், மற்றும், கொள்ளைநோயின் தாக்கம் ஆகியவை மிகவும் கருத்தூன்றி ஆராயப்படவேண்டும் என்றும், இவை வறியோரையும், நலிந்தோரையும் மிகவும் பாதிக்கின்றன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதழ் ஒன்றில் எழுதியுள்ளார்.
“Green and Blue” என்ற இத்தாலிய இதழுக்கு திருத்தந்தை எழுதியுள்ள ஆசிரியர் பக்கத்தில், இக்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இத்தகைய எதார்த்த நிலைகளுக்கு நாம் புறமுதுகு காட்ட இயலாது என்றும், இன்றைக்கு, ஓர் உண்மையான சூழலியல் ஊடகத்தின் தேவை அதிகரித்துள்ளது என்றும், அது உடனடித் தேவையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதரின் இறுதிநிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே நிலவும் தொடர்புகளைச் சுட்டிக்காட்டி அவற்றை விளக்கவேண்டியதும், நாம் உயிர்வாழ்வதற்கு, சுற்றுச்சூழலில் மாற்றம் அவசியம் என்பதை, நாடுகளின் தலைவர்கள், தொழில்முனைவோர், வர்த்தகர்கள், குடிமக்கள் போன்ற எல்லாருக்கும் எடுத்துரைக்கவேண்டியதும் ஊடகவியலாளர்களின் பணி என்பதை திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அதிகம் துன்புறும் மக்கள் தொடங்கி, அனைத்து மனிதரின் மாண்பை எப்போதும் மதிப்பதை வைத்து, இதழியலின் தரம் கணிக்கப்படும் என்றும், நீடித்த நிலையான வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எல்லாருக்கும் போதுமான உணவு மற்றும், தண்ணீர் ஆகியவை, முழுமனித சமுதாயத்தின் வருங்காலத்தை வளமானதாக்குவதற்கு அடிப்படையானவை என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
கோவிட்-19 கொள்ளைநோய், நாடுகளின் எல்லைகள், கலாச்சாரம், அரசியல் போன்ற எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைவரையும் பாதித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீள்வதற்கு கிடைக்கும் அரிய வாய்ப்புக்களிலிருந்து ஒதுங்கிக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
தன்னார்வம் மற்றும், தணியாத அதிகாரத்தாகம் ஆகியவற்றோடு, பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முயற்சித்தால், தற்போதைய நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒன்றுசேர்ந்து முயற்சித்தால், இப்பூமிக்கோளம் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து உயிர்த்தெழ முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: New feed