திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்” (மத்.23:8) என்ற இயேசுவின் திருச்சொற்களை மையப்படுத்தி, ஈராக் நாட்டுக்கு, தனது முதல் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார். இதுவரை திருத்தந்தையர் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளாத நாடாக இருந்த ஈராக்கில், தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றிய தன் எண்ணங்களை, மார்ச் 10, இப்புதன் மறைக்கல்வியுரையில் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியில் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவருவதையொட்டி, இப்புதன் மறைகல்வியுரையை, வத்திக்கானில், தன் நூலக அறையிலிருந்தே திருத்தந்தை வழங்கினார். முதலில், தொடக்க நூலிலிருந்து ஒரு பகுதி, பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.
“ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்…. ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்…. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்”. (12,1.4; 15,5-6)
அதன்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறைக்ல்வியுரையை இத்தாலிய மொழியில் துவக்கினார். ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட இம்மறைக்கல்வியுரையின் தமிழாக்கம் இதோ…
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இந்நாள்களில், இறைப்பராமரிப்பின் உதவியால், ஆபிரகாமின் பூமிக்கு, திருத்தந்தை ஒருவரின் முதல் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ள என்னால் முடிந்தது. ஈராக் திருத்தூதுப் பயணத்தை இயலக்கூடியதாக அமைத்த, அக்குடியரசின் அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள், பல்வேறு திருஅவைகளின் முதுபெரும்தந்தையர், ஆயர்கள், பொதுநிலை விசுவாசிகள், அந்நாட்டின் சமய அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். குறிப்பாக, ஈராக்கின் ஷியா பிரிவின் சமயத் தலைவர், பெரும் Ayatollah Al Sistani அவர்களுடன் நஜாஃப் நகரில் நடைபெற்ற இனிய சந்திப்புக்கு, நான் மிகவும் நன்றியோடு இருக்கிறேன். எனது ஈராக் திருத்தூதுப் பயணம், ஒரு தவத் திருப்பயணமாக அமையவேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. வன்முறை, பயங்கரவாதம், மற்றும், போர் ஆகியவற்றால் துன்புற்றுள்ள, மற்றும், கிறிஸ்தவர்களின் இருப்பு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதற்குச் சாட்சியாக உள்ள மறைசாட்சிகளின் திருஅவையோடு எனது நெருக்கத்தையும், தோழமையையும் வெளிப்படுத்துவதற்காக, இந்த திருத்தூதுப் பயணம், தவத்தின் திருப்பயணமாக அமையவேண்டும் என்று விரும்பினேன். ஊர் என்ற நகரில் பல்சமயத் தலைவர்களோடு நான் நடத்திய சந்திப்பில், மத நம்பிக்கையாளர்களுக்கு இடையே, மனித உடன்பிறந்தநிலையும், ஒத்துழைப்பும் வளரவேண்டும் என்று, நாங்கள் இறைவேண்டல் செய்தோம். இந்த உடன்பிறந்தநிலை, ஈராக்கிற்கு மட்டுமல்ல, போர்கள் இடம்பெறும் அனைத்துப் பகுதிகளுக்கும் சவாலாக உள்ளது. நம் மத்தியில் உடன்பிறந்தநிலையை வளர்க்கும் திறனை நாம் கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியையும், திருத்தந்தை எழுப்பினார். பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்றுக்கொண்டிருந்தவர்கள் யார்? இன்றும், ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் படுகொலைகளை மேற்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்பவர்கள் யார்? என்ற கேள்வி எனக்குள்ளே எழுகின்றது. இதற்கு யாராவது பதில் சொல்லவேண்டும் என விரும்புகிறேன் என்றும் திருத்தந்தை கூறினார்.
இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியுரையை தொடர்ந்து ஆற்றினார்.
ஆபிரகாம், கடவுளின் அழைப்பைப் பெற்ற ஊர் என்ற அந்த இடத்தில், இரு ஈராக்கிய இளையோராகிய, கிறிஸ்தவர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் சான்று பகர்ந்தனர். கடவுளன்பு மற்றும், அயலவர் அன்பில் வேரூன்றப்பட்டு, தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை மதித்து, நட்புணர்வில் எவ்வாறு வாழ முடிகின்றது என்பதை, அந்த இரு இளையோரும் கூறியபோது, மிக உருக்கமாக இருந்தது. 2010ம் ஆண்டில், 48 பேர் கொல்லப்பட்ட பாக்தாத் சிரிய வழிபாட்டுமுறை கத்தோலிக்க பேராலயத்திலும், மோசூல் மற்றும், கரகோஷ் நகரங்களில், சிதைக்கப்பட்ட ஆலயங்கள் மற்றும், மசூதிகளில் நடைபெற்ற சந்திப்புக்களிலும், பாக்தாத் மற்றும், எர்பில் நகரங்களில் நிறைவேற்றிய திருப்பலிகளிலும், கிறிஸ்தவர்களாக, நாம் அழைக்கப்பட்டுள்ளதன் அர்த்தம் பற்றி சிந்தித்தோம். கிறிஸ்துவால் கற்றுக்கொடுக்கப்பட்ட, மன்னிப்பு, ஒப்புரவு, மற்றும், அமைதி ஆகியவற்றுக்கு நாம் சாட்சிகளாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பது பற்றி தியானித்தோம். ஈராக், மத்தியக் கிழக்குப் பகுதி மற்றும், உலகம் முழுவதிலும், உடன்பிறந்தநிலை மற்றும், அமைதியை நோக்கிய பயணம் தொடர்வதற்கு, இந்த நாள்கள் உதவட்டும் என்று நாம் எல்லாரும் இறைவனை மன்றாடுவோம்.
இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 10, இப்புதனன்று தன் மறைக்கல்வியுரையில் செபித்து, அதனை நிறைவுசெய்தார். பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் திருத்தந்தை வழங்கினார்.
Source: New feed