அன்னை மரியா, பாவம் ஏதுமற்றவராய் பிறந்தார் என்ற மரபுவழி பக்தி முயற்சி, கீழை வழிபாட்டு முறை திருஅவைகளில் பல ஆண்டுகளாக சிறப்பிக்கப்பட்டது எனினும், மரியா பாவமற்றவராய்ப் பிறந்தார் என்ற கோட்பாடு, கத்தோலிக்கத் திருஅவையில், 1854ம் ஆண்டு நிறுவப்பட்டது.
திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், 1854ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, ‘Ineffabilis Deus’, அதாவது, ‘சொல்லில் அடங்கா இறைவன்’ என்ற பெயரில் வெளியிட்ட திருமடல் வழியே, அன்னை மரியா, பாவம் ஏதுமற்றவராய் பிறந்தார் என்ற மறையுண்மையை கத்தோலிக்கத் திருஅவையின் கோட்பாடாக வெளியிட்டார்.
இந்த கோட்பாடு வெளியிடப்பட்டதையடுத்து, 1855ம் ஆண்டு, உரோம் நகரில், இஸ்பானிய சதுக்கத்தில், அன்னை மரியாவின் திருஉருவத்தைத் தாங்கி நிற்கும் தூணுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் அன்றைய தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Giacomo Filippo Franzoni அவர்கள் முன்னின்று நடத்தினார்.
கட்டடக் கலைஞர் Luigi Poletti அவர்கள் வடிவமைத்த 12 மீட்டர் உயரமுள்ள பளிங்குத் தூணில், 1856ம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி, தீயணைப்புப் படையைச் சேர்ந்த 200 வீரர்கள் இணைந்து, சிற்பக்கலைஞர் Giuseppe Obici அவர்கள் உருவாக்கிய அன்னை மரியாவின் திரு உருவச்சிலையைப் பொருத்தினர்.
அன்னை மரியா, பாவம் ஏதுமற்றவராய் பிறந்தார் என்ற மறையுண்மை வெளியான 1854ம் ஆண்டின் முதல் நூற்றாண்டை, அன்னை மரியாவின் யூபிலி என்று கொண்டாட, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கத்தோலிக்க மக்களுக்குப் பணித்தார்.
கத்தோலிக்கத் திருஅவையில் முதன்முறையாக, அறிவிக்கப்பட்ட அன்னா மரியாவின் யூபிலி ஆண்டை துவக்கிவைக்கும் நோக்கத்துடன், 1953ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உரோம் மாநகரின் இஸ்பானிய வளாகத்திற்குச் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தினார்.
திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித 23ம் யோவான், திருத்தந்தை புனித 6ம் பவுல் ஆகிய இருவரும் மரியன்னைக்கு வணக்கம் செலுத்தும் பழக்கத்தை டிசம்பர் 8ம் தேதி கடைபிடித்தனர்.
குறிப்பாக, 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி 2ம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்ற வேளையில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் இஸ்பானிய வளாகம் சென்று, அன்னை மரியாவுக்கு சிறப்பான முறையில் நன்றியும், வணக்கமும் செலுத்தினார்.
திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், அன்னை மரியாவின் வணக்க நிகழ்வை இன்னும் முறைப்படுத்தி, விவிலிய வாசகம் ஒன்றையும் இந்நிகழ்வில் இணைத்தனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தியபின், புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அங்கு, நற்செய்தியாளர் லூக்கா அவர்களால் உருவாக்கப்பட்டதாய் கருதப்படும் Salus Popoli Romani, அதாவது, உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னை மரியாவின் திருப்படத்தின் முன்பாக, செபிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்.
Source: New feed