இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, ஹங்கேரி நாட்டு வெளியுறவு அமைச்சகமும், தலத்திருஅவையும் இலங்கைக்கு நிதியுதவியை அனுப்பியுள்ளன.
ஹங்கேரி நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச்செயலர் Tamás TÓTH அவர்கள், செப்டம்பர் 4, இப்புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹங்கேரி ஆயர் பேரவையின் நிலைத்த குழு, இலங்கையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென, நன்கொடை திரட்டுவதற்கு அண்மையில் மேற்கொண்ட முயற்சியின் பயனாகக் கிடைத்த, 1 கோடியே 32 இலட்சம் டாலரை, கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஹங்கேரி கத்தோலிக்கத் திருஅவை அனுப்பியுள்ள இந்த நன்கொடையில், 37 ஆயிரம் டாலர், ஹங்கேரியின், வெளியுறவு மற்றும், வர்த்தகத் துறை அமைச்சர் Péter Szijjártó அவர்கள் வழங்கியதும் உள்ளடங்கும் என்றும், அவ்வறிக்கை கூறுகின்றது.
மேலும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது, ஹங்கேரி திருஅவையும், வெளியுறவு மற்றும், வர்த்தக அமைச்சகமும் காட்டியுள்ள தோழமையுணர்வுக்கு நன்றி சொல்லி, கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், நன்றி மடல் ஒன்றை அனுப்பியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள எம் சகோதரர், சகோதரிகளுக்கு, மிகத் தாராளத்துடன் உதவி செய்த ஹங்கேரி திருஅவையின் உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் நன்றி சொல்கிறோம் என்று, இலங்கை மக்கள் சார்பாக எழுதியுள்ளார், கர்தினால் இரஞ்சித்.
இலங்கையில் ஏறத்தாழ 7 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையினோர் கத்தோலிக்கர்
Source: New feed