கடந்த பல மாதங்களாக, இவ்வுலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுநோய் குறித்து, ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து, ‘உலகை குணப்படுத்தல்’ என்ற தலைப்பில், தன் சிந்தனைகளை, புதன் மறைக்கல்வி உரைகளில், ஒரு தொடராக பகிர்ந்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 7ம் தேதி, இப்புதனன்று, இறைவேண்டல் குறித்த ஒரு புதிய தொடரைத் துவக்கினார்.
செப்டம்பர் 2ம் தேதி, புதனிலிருந்து, வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், மக்களை நேரடியாக சந்தித்துவந்த திருத்தந்தை, அக்டோபர் 7, இப்புதனன்று, காலையிலிருந்தே மழை தூறிக்கொண்டிருந்ததை முன்னிட்டு, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மண்டபத்தில் மக்களைச் சந்தித்து உரை வழங்கினார். இறைவாக்கினர் எலியாவின் வாழ்வை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்னர், அரசர்கள் முதல் நூல் 19ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.
1 அரசர் 19,11-13
அப்போது ஆண்டவர் எலியாவிடம், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால், ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்
இந்த வாசகத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையை வழங்கினார்.
மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர், சகோதரிகளே, இன்று நாம், இறைவேண்டல் குறித்த ஒரு புதிய மறைக்கல்வித்தொடரைத் துவங்குகிறோம். இத்தொடரில், முதலில், மேன்மைக்குரிய இறைவாக்கினர் எலியா அவர்களின் வாழ்வு குறித்து நோக்குவோம். இயேசு, மலைமீது உருமாறியவேளையில், மோசேயுடன், எலியாவும் தோன்றியதைக் காண்கிறோம். இவர்களின் தோற்றம், பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளின் நிறைவாக விளங்கும் இயேசுவுக்கு சான்று பகர்வதாக இருந்தது.
எத்தகையத் துயர்களிலும் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காதவராகவும், இறைவேண்டலின் மனிதராகவும், துறவுமட பாரம்பரியங்களில் போற்றி பெருமதிப்பளிக்கப்படுகிறார், இறைவாக்கினர் எலியா. பெரும் வெற்றிகளின் காலத்தில் மட்டுமல்ல, எதிர்ப்பு, மற்றும், சித்ரவதைகள் நடுவிலும் இவருக்கு உரமூட்டுவதாக, இறைவேண்டலும், ஆழ்மன தியானமும் இருந்தன.
பேரார்வமுடைய இறைவேண்டல், மற்றும், இறைவனுடன் கூடிய ஒன்றிப்பு என்பதிலிருந்து, நம்மைச் சுற்றியிருப்பவர்களின் தேவை குறித்த நம் அக்கறை பிரிக்கமுடியாதது என்பதை, இறைவாக்கினர் எலியா நமக்கு கற்றுத்தருகிறார்.
இறைவிருப்பம் குறித்த பகுத்தறிதலை, இறைவேண்டலின் வழியாக வளர்த்துக்கொண்ட எலியா அவர்கள், அச்செபத்தின் துணைகொண்டே, அநீதிகளைச் சாடும் பலத்தையும் கண்டுகொண்டார். இதற்காக, அவர் பேரிழப்புக்களை சந்திக்கவேண்டியிருந்தது. செபத்தில் எலியாவின் இறை அனுபவம், தீயிலோ, பெருங்காற்றிலோ இறைவன் தோன்றியதால் கிட்டவில்லை. மாறாக, அடக்கமான மெல்லிய ஒலியில் இறைவனைக் கண்டதில் தன் உச்சத்தை அடைந்தது.
இந்த இறைவாக்கினர் போல், நாமும் இறைவேண்டலில் நிலைத்திருந்து, ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் இறைவிருப்பத்தைக் கண்டுகொள்ள முயல்வோமாக. அதன் வழியாக, நம் வாழ்வின் நிசசயமற்ற தருணங்களிலும், துன்பங்களிலும், இறை பிரசன்னம், மற்றும், இறைவனின் பரிவு தரும் ஆறுதலைப் பெறுவோமாக.
தன் மறைக்கல்வி உரையை இவ்வாறு நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 7, இப்புதனன்று, செபமாலை அன்னை மரியாவின் திருவிழா திருஅவையில் சிறப்பிக்கப்பட்டதை, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவூட்டினார். பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவர்களுக்கு உரமூட்டுவதாக இருந்த செபமாலையின் அழகை கண்டுகொள்ள, குறிப்பாக, இந்த பக்திமுயற்சிக்கென அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் கண்டுகொள்ள, அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
Source: New feed