கோவிட்-19 கொள்ளைநோய் விலகியிருத்தல் விதிமுறை காரணமாக, அனைத்து புனிதர்கள் பெருவிழா மற்றும், இறந்தோர் நினைவு நாள் ஆகிய இரு முக்கிய நாள்களையொட்டி, புதிய இணையதளம் ஒன்றை, பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் உருவாக்கியுள்ளனர்.
அனைத்து ஆன்மாக்கள் நாள் என்ற தலைப்பில் (Undas), அக்டோபர் 13, இச்செவ்வாயன்று, புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள், இறந்த அனைவரையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்காகச் செபித்து, திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கும் கத்தோலிக்க மரபு தொடர்ந்து காக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளனர்.
நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் சிறப்பிக்கப்படும் இரண்டு முக்கிய நாள்களில், இலட்சக்கணக்கான பிலிப்பீன்ஸ் மக்கள் கல்லறைகளைச் சந்தித்து, தங்களைவிட்டு நிரந்தரமாய்ப் பிரிந்துசென்றவர்களை நினைவுகூர்கின்றனர்.
கல்லறைகளில் திருப்பலிகள் நிறைவேற்றுவது மற்றும், இறைவேண்டல் விண்ணப்பங்களைப் பெறுவது, கொரோனா கொள்ளைநோயால் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, இறந்தோர் நினைவுத் திருப்பலிகளை, வலைத்தளம் வழியாக நிறைவேற்றுமாறு, அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில், காணொளி வழியாக நிறைவேற்றப்படும் திருப்பலிகள், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் ஊடகப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Pedro Quitorio அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்கர், இறந்துபோன தங்கள் உறவுகளுக்காக, வீடுகளிலேயே பீடங்கள் அமைத்து நவநாள் செபங்களைச் செய்து, அவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் என்றென்றும் இளைப்பாறச் செபிக்கலாம் என்றும், ஆயர் Pedro Quitorio அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்.
Source: New feed