நமது வாழ்வு எவ்வாறு முடியும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், ஒவ்வொரு நாளும் நாம் ஆன்ம ஆய்வை மேற்கொள்வது நல்லது என்ற அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பலியில் விடுத்தார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, சீராக்கின் ஞானம் நூலிலிருந்து வழங்கப்பட்டிருந்த பகுதியை (சீராக் 5:1-8) மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.
வாழ்விலிருந்து வருவது ஞானம்
ஞானம், ஒவ்வொரு நாள் வாழ்விலிருந்தும் வருகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாள் வாழ்வையும் மறுபடியும் மீள் பார்வை செய்வதால், நாம் ஞானத்தில் வளர்கிறோம் என்று எடுத்துரைத்தார்.
கடவுள் பரிவுள்ளவர் என்ற எண்ணத்தை மட்டும் வலியுறுத்தி, நம் மனம் போன போக்கில் வாழ்வது ஆபத்தானது என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன; அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்” (சீராக் 5:6) என்ற கூற்றை சீராக் நூலிலிருந்து சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு நாளும் 5 நிமிட ஆன்ம ஆய்வு
“ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே” என்ற சீராக்கின் சொற்களை தன் மறையுரையில் நினைவுறுத்திய திருத்தந்தை, ஒவ்வொரு நாளின் இறுதியிலும் 5 நிமிடங்கள் ஒதுக்கி, அன்றைய நாளை மீள்பார்வை செய்வது, நம் மனமாற்றத்திற்கு பெரிதும் உதவும் என்று எடுத்துரைத்தார்
Source: New feed