கடந்த ஆண்டு இயேசு உயிர்ப்புப் பெருவிழாவின்போது இலங்கையின் கொழும்பு நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களோடு தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்பட்டு வருவது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார், இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்.
இயேசு உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டத்தின்போது, இலங்கையின் மூன்று ஆலயங்களிலும் மூன்று பயணியர் விடுதிகளிலும், குண்டு வைத்து தாக்கியவர்களுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டவர்களில் Riyaj Bathiudeen என்பவர், அண்மையில், ஆதாரங்கள் இல்லையென விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், குண்டு வெடிப்புக்களால் மனத்தளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கவேண்டிய கடமையிலிருந்து அரசு ஒதுங்கி நிற்கமுடியாது என்று கூறினார்.
சில செய்தி நிறுவனங்களின் கூற்றுப்படி, இஸ்லாமிய கட்சியின் ஆதரவை எதிர்நோக்கி, முன்னாள் அமைச்சர் Rishad Bathiudeenன் சகோதரரான Riyajஐ, அரசு விடுதலை செய்துள்ளதாக அறியப்படுகிறது.
இதற்கிடையே, இவரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, Katuwapitiyaவின் புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு முன்பு விசுவாசிகள் கூடி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களால் தாக்கப்பட்ட கோவில்களுள் இதுவும் ஒன்று.
கடந்த ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவின்போது இலங்கையின் மூன்று கத்தோலிக்க ஆலயங்களிலும், மூன்று பயணியர் மாளிகைகளிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களில் குறைந்தது, 279 பேர் கொல்லப்பட்டனர், மற்றும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Source: New feed