செம்பொன் உலையில் சுத்தமாகிறதைப் போல உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பிலே சுத்திகரிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்தை அடைவார்கள் என்று வேதபாரகர் ஒழுங்குடன் சொல்லுகிற சத்தியமாம் . சரீரத்தை விட்டு பிரிந்து போன ஆத்துமம் எப்படி நெருப்பிலே வாதிக்கப்படுமென்றால், சர்வேசுரனுடைய சர்வ வல்லபத்தால் புதுமையாக அப்படி மெய்யாகவே ஆகுமென்று அர்ச். அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார் . ஆத்துமாக்களை சுட்டழிக்காமல் அவைகளை சுட்டெரித்து சுத்தமாக்குகிற இந்த நெருப்பு எவ்வளவு பெரிய வேதனை என்று சற்று நேரம் தியானிப்போமாக
நெருப்பினாலே வருகிற வேதனை எல்லா வேதனைகளை விடக் கொடியது என்று சிறு பிள்ளைகள் முதலாய்ச் சொல்லுவார்கள் அல்லவோ ? ஓர் இராச்சியத்தை சுதந்தரிக்க வேணுமென்றால் ஒன்றிரண்டு நாள் அல்லது ஒன்றிரண்டு மணிநேரம் நெருப்பிலே வேகவேணுமென்றிருந்தால் அதற்குச் சம்மதிப்பாருண்டோ ? இவ்வுலகத்திலுள்ள நெருப்பானது அவ்வளவு பயங்கரமான வேதனை கொடுக்கும்போது உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு எப்பேர்பட்டதாய் இருக்கும்?
நெருப்பானது கற்பாறைகளையும் ,இரும்பு ,வெள்ளி, தங்கம் முதலான உலோகங்களையும் வைரக் கற்களையும் உருகப் பண்ணுமே . இந்த நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு என்று சொல்ல கூடுமோ ? அப்படி உத்தேசமாய்ச் சொல்ல முடியாது நேபுக்கோத்தநேசர் மன்னன் மூன்று சுத்த வாலிபரைச் சுட்டெரிக்க நெருப்பு சுவாலையை ஏழு பங்கு அதிகமாய் மூட்டி எரிக்க வேணுமென்று மகா கோபத்தோடு கற்பித்தானே, அகோரமாய் எரியும் அந்த சுவாலையின் நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பென்று சொல்லக் கூடுமோ ? அப்படிச் சொல்லவும் முடியாது
சோதோம் , கொமேர் பட்டணங்களில் இருந்த குடிகள் பெரும் பாவிகளாய் இருந்தபடியினாலே இந்தப் பட்டணங்களையும் சுற்றுப் பட்டணங்களையும் முழுதும் அழிக்கத்தக்கதாக சர்வேசுரனுடைய கோபத்தினாலே நெருப்பு மழை பொழிந்து இந்த நாடெல்லாம் அக்கினியிலே எரிந்து போனதே , இப்பேர்பட்ட அக்கினி உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்புக்குச் சரியொத்தது என்று சொல்ல முடியுமோ ? அதையும் சொல்ல முடியாது
Source: New feed