I எசாயா 60: 1-6
II எபேசியர் 3: 2-3a, 5-6
III மத்தேயு 2: 1-12
ஞானிகளின் பரிசு
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்தது நூறு ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமையான கோயில். பங்குப் பணியாளர் அக்கோயிலைப் புதுப்பிக்க விரும்பினார். அதற்காக அவர் பங்கில் இருந்த முக்கியமான நபர்களை அழைத்து, கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பங்குப் பணியாளர் பங்குக்கோயிலைப் புதுபிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிவிட்டு, “யார் யார் எவ்வளவு தருவீர்கள்?” என்றார். உடனே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய பணக்காரரும், அதேநேரத்தில் வடிகட்டிய கஞ்சருமானவர் எழுந்து, “பங்குக் கோயிலைப் புதுபிப்பதற்காக நான் ஆயிரம் உரூபாய் தருகின்றேன்” என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார்.
அவர் இவ்வாறு சொல்லி முடித்ததுதான் தாமதம், கோயில் கூரையிலிருந்து ஒரு சிறிய கல் பெயர்ந்து, அவருடைய முதுகில் விழுந்தது. அதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போன அந்தப் பணக்காரக் கஞ்சர் மீண்டுமாக எழுந்து, “பங்குப் கோயிலைப் புதுப்பிப்பதற்காகப் பத்தாயிரம் உரூபாய் தருகின்றேன் என்று சொல்வதைத்தான் ஆயிரம் உரூபாய் தருகின்றேன் என்று சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.
இதையடுத்து அங்கு சிறிதுநேரம் அமைதி நிலவியது. அப்பொழுது ஒரு குரல், “கடவுளே! இவர்மீது மீண்டுமாகக் கூரையிலிருந்து ஒரு கல் பெயர்ந்து விழச் செய்யும்” என்றது. இக்குரலைக் கேட்ட அந்தப் பணக்காரக் கஞ்சர், எங்கே மீண்டுமாகத் தன் மேல் கல் விழுந்துவிடுமோ என்று அஞ்சி, “கோயிலைப் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு இலட்ச ரூபாய் தருகின்றன்” என்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், பலருக்கு மடிநிறைய பொருள் இருந்தும், அதை கடவுளுக்கு மனமுவந்து கொடுக்க விருப்பமில்லை என்ற உண்மையை இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது. இதற்கு முற்றிலும் மாறாக, இன்று நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவில் வருகின்ற மூன்று ஞானிகள் தங்களிடம் இருந்ததை மனமுவந்து ஆண்டவருக்குக் காணிக்கையாகத் தருகின்றார்கள். மூன்று ஞானிகளும் நமக்கு என்ன செய்திகளை உணர்த்துகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஞானிகள் தந்த விலையுயர்ந்த பரிசுகள்
வானில் விண்மீன் தோன்றுவது என்பது கடவுள் கொடுக்கின்ற மிகப்பெரிய அடையாளம். அது முன்பு ஆபிரகாம், ஈசாக்கு, மோசே ஆகியோர் பிறந்தபொழுது வானில் தோன்றியதாக யூதர்கள் நடுவில் ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இயேசுவின் பிறப்பையொட்டி வானில் விண்மீன் ஒன்று எழுகின்றது. அதைப் பார்த்துவிட்டுதான் கீழ்த்திசை ஞானிகள் இயேசுவைப் பார்க்க வருகின்றார்கள். “வானில் விண்மீன் எழக்கண்டோம்” என்று ஞானிகள் சொல்வது, “யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்” (எண் 24: 17) என்று பிலயாம் உரைத்த இறுதி உரையை நமக்கு நினைத்துபடுத்துவதாக இருக்கின்றது.
விண்மீன் வழிகாட்டியதன்படி இயேசுவைக் காண வரும் ஞானிகள், தங்களிடம் இருந்த பொன்னையும் சாம்பிராணியையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாகத் தருகின்றார்கள். ஞானிகள் இயேசுவுக்குத் தருகின்ற பொன் அவர் அரசர் என்பதையும், சாம்பிராணி அவர் கடவுள் என்பதையும் (விப 30: 37), வெள்ளைப்போளம் அவருடைய மனிதத்தன்மையையும் (விப 30: 23) நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. ஞானிகள் இயேசுவை அரசராகவும் கடவுளாகவும் மனிதராகவும் பார்த்து, தங்களிடம் இருந்தவற்றைக் மனமுவந்து காணிக்கையாகத் தந்ததுபோல், நாம் நம்மிடம் இருப்பவற்றை முகமலர்ச்சியோடு தரவேண்டும் (2 கொரி 9: 7).
இயேசு எல்லாருக்குமானவர்
கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள் குழந்தை இயேசுவைக் கண்டது – தரிசித்தது – இயேசு எல்லாருக்குமானவர் என்ற உண்மையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. யூதர்கள், மெசியா எல்லா நாடுகளின்மீது போர்தொடுத்து வெற்றிகொண்டு, எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்துவார் என்று நினைத்தார்கள். இவ்வாறு அவர்கள் மெசியா தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று நினைத்தார்கள்; ஆனால் கீழ்த்திசையிலிருந்து இயேசுவைக் காண வந்த ஞானிகள், தங்களிடமுள்ள பரிசுகளைத் அவருக்குத் தருவதன் மூலம், அவர் எல்லாருக்குமானவர் ஆகின்றார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே கருத்தினைத்தான் எடுத்துரைக்கின்றது.
பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்ட யூதேய நாட்டினர் அன்னிய மண்ணில் அடிமைகளாகவும், கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்துவிட்டார் என்ற எண்ணத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் புதிய எருசலேமைக் குறித்து பேசுகின்ற இறைவாக்கினர் எசாயா, “பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்” என்கின்றார். இதுமூலம் மெசியாவாம் இயேசு எல்லாருக்குமானவர் என்ற உண்மை நிலை நாட்டப்படுகின்றது. மெசியா எல்லாருக்குமானவர் எனில், நாம் அனைவரும் உடன் உரிமையாளராகவும், ஒரே உடலின் உறுப்பினராகவும் வாக்குறுதியின் பக்காளிகளாகவும் ஆகின்றோம். இதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.
நாம் அனைவரும் கிறிஸ்து என்ற ஒரே உடலின் உறுப்புகள் என்றால், நம்மிடம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது.
கடவுளை நாம் எத்தகைய மனநிலையோடு தேடுகின்றோம்?
கீழ்த்திசை ஞானிகள் இயேசுவைத் தேடி வந்ததை ஒட்டி, மூன்றுவிதமான மனிதர்கள் நற்செய்தியில் இடம்பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். முதல்வகையான மனிதர்கள் பதவிக்காக எதையும் செய்யத் துணியும் ஏரோது போன்றவர்கள். இந்த ஏரோது, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கின்றவர் எங்கே?” என்று ஞானிகள் கேட்டதும், எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கலங்குகின்றான். இந்த எரோதைப் போன்று பதவிக்காக எதையும் செய்யத் துணியும் மனிதர்களை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கலாம்.
இரண்டாவது வகையினர் இயேசுவை, கடவுளைப் பெரிதுபடுத்தாத மறைநூல் அறிஞர்களைப் போன்றவர்கள். இந்த மறைநூல் அறிஞர்களுக்கு இயேசு எங்கே பிறப்பார் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. இருந்தாலும், அவர்கள் எருசலேமிற்கு மிக அருகில் இருக்கும் பெத்லகேமில் பிறந்த இயேசுவைக் காண விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள். இன்றைக்கும் கூட, பலர் பெயரளவுக்குக் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு, கடவுளிடம் விருப்பமில்லாமல் இருப்பதைப் பார்க்காலம். மூன்றாவது வகையினர் இயேசுவை முழுமனத்தோடு தேடிய ஞானிகளைப் போன்றவர்கள். இவர்கள் இயேசுவைக் காண்பதற்காகப் பல்வேறு இன்னல் இக்கட்டுகளைச் சந்தித்திருக்கவேண்டும். அவற்றையெல்லாம் கடந்து இவர்கள் இயேசுவைக் காணும் பேறுபெறுகின்றார்கள். நாம் ஒவ்வொருவரும் ஏரோது போன்றோ, மறைநூல் அறிஞர்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளைப் போன்று முழு மனத்தோடு ஆண்டவரைத் தேடி, அவர் தருகின்ற ஆசிகளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு’ (உரோ 12: 1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஞானிகளைப் போன்று கடவுளுக்கு நம்மையே காணிக்கையாகத் தந்து, அவர்களைப் போன்று முழு ஆண்டவரைத் மனத்தோடு தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed