உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————-
நீங்கள் உயிர் பெறுவீர்கள்
பொதுக் காலத்தின் இருபதாம் வாரம் வெள்ளிக்கிழமை
I எசேக்கியேல் 37: 1-14
II மத்தேயு 22: 34-40
நீங்கள் உயிர் பெறுவீர்கள்
ஒருவரை அல்ல, நால்வரை:
மறைக்கல்வி மாணவர்களுக்கான திருப்பலியில் அருள்பணியாளர், “புதிய கட்டளை” (யோவா 13: 31-35) என்ற இறைவார்த்தைப் பகுதியை வாசித்துவிட்டு, “நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும். அவ்வாறு அன்பு செய்தால்தான் நீங்கள் இயேசுவின் சீடர்களாய் இருப்பீர்கள்” என்று பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மறையுரையின் இறுதியில் அவர், “நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு மறைக்கல்வி மானவர்கள் அனைவரும், “ஆமாம்” என்று ஒருமித்த குரலில் பதிலளித்தபோது, ஜெசி என்ற மாணவி மட்டும், “நான் ஒருவரை அல்ல, இவாஞ்சலின், ஜாஸ்மின், கரோலின், மெர்லின் என்று என் தோழிகள் நான்கு பேரை அன்பு செய்கின்றேன்” என்றாள். அவள் சொன்ன அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு அருள்பணியாளர் வியந்து போனார்.
ஜெசி என்ற அந்த மாணவி சொன்ன பதில் வேடிக்கையானதாக இருந்தாலும், நமது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் கடவுளையும் ஒருவர் மற்றவரையும் அன்பு செய்கின்றபோது, உயிர் பெறுவோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்து, அதைத் தூய்மைப்படுத்திய நிகழ்விற்குப் பிறகு (மத் 21: 12-17) யூத சமயத் தலைவர்கள் அவரை எப்படியாவது பேச்சில் சிக்கவைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் சீசருக்கு வரி செலுத்துவது பற்றிக் கேட்டார்கள். உயிர்த்தெழுதலைப் பற்றி, அதன்மீது நம்பிக்கையில்லாத சதுசேயர்கள் அவரிடம் கேள்வி கேட்டார்கள்.
இன்றைய நற்செய்தியிலோ திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். இந்தத் திருச்சட்ட அறிஞர் பரிசேயர்களின் பிரதிநிதி என்பது குறிப்பிடத் தக்கது. வழக்கமாக இயேசு தன்னிடம் கேள்வி கேட்போரிடம் பதிலளிக்கும்போது வித்தியாசமான ஒரு பாணியைக் கடைப்பிடிப்பதுண்டு. அது என்னவெனில், கேள்வி கேட்போரின் வாயிலிலிருந்தே பதிலை வெளிக்கொணர்வது. இன்றைய நற்செய்தியில் அது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இதன் ஒத்தமை நற்செய்தியான லூக்கா நற்செய்தியில் (லூக் 10: 27) வெளிப்படையாகத் தெரியும்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இறையன்பு முதன்மையான கட்டளை; பிறரன்பு அதற்கு இணையான கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாய் அமைந்திருக்கின்றன” என்று தெளிவாய்ப் பதில் அளிக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்த்தில் எலும்புகள் உயிர் பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்ட யூதா நாட்டினர் எலும்புகளைப் போன்று இருந்தனர். இந்நிலையில் கடவுள் அவர்கள்மீது தம் ஆவியைப் பொழிந்து, உயிர் அளிப்பதாகச் சொல்கின்றார். இதனை நற்செய்தி வாசகத்தோடு தொடர்பு படுத்திப் பார்த்தால், அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஒவ்வொருவரும் உயிர் பெறலாம், அல்லது நிலைவாழ்வைப் பெறலாம் என்று எடுத்துக்கொள்ளலாம். எனவே, நாம் அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து, உயிர்பெறுவோம்.
சிந்தனைக்கு:
அன்பில்லாத மனிதர் வெறும் எலும்புக் கூடே!
கடவுள் நமக்கு வாழ்வுதரக் காத்திருக்கின்றார். அதற்கு நாம் அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வது முக்கியம்.
நீரின்றி மட்டுமல்ல, அன்பின்றியும் அமையாது உலகு.
இறைவாக்கு:
‘அன்பு காட்டும்போது நாம் எதையும் இழப்பதில்லை; மாறாக ஏராளமான நன்மைகளைப் பெறுகின்றோம்’ என்பார் ரீஸ் விதர்ஸ்பூன் என்ற அறிஞர். எனவே, நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, இறையன்புச் சாட்சிகளாகத் திகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed