வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அந்நாள்களில்
மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,
“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 15)
ஒரு தாய் தன்னுடைய ஒருமாதக் குழந்தையுடன் தரையில் பாய் விரித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடிரென்று கருநாகம் ஒன்று வாசல் வழியே வந்து அவர்களுக்கு முன்பாக படமெடுத்து நின்றது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் பதைபதைத்துப் போனார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றார்கள். பின்னர் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால் ஒரு நீளமான தடியை எடுத்து அவளைத் தட்டிப் பார்த்தார்கள். அப்போதும்கூட அவள் எழுந்திருக்கவில்லை. இறுதியாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்து குழந்தையின்மீது எறிந்தார்கள். அடுத்த நிமிடம் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவள், குழந்தையின் மீது விழுந்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து தூர எறிந்தாள். அதன்பின் தன் முன்னால் இருந்த பாம்பிடமிருந்து குழந்தையும், தன்னையும் எந்த ஒரு பதற்றமுமின்றிக் காப்பாற்றினாள்.
அக்கம் பக்கத்து வீட்டார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோதும், தடியால் அடித்தபோதும்கூட எழாத தாய், தன்னுடைய குழந்தைக்கு எதோ ஒன்று நடக்கிறது என்றவுடன் எவ்வளவு பதறிப்போகிறாள்!. ஒவ்வொரு நொடியும் குழந்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருகிற ஒருதாயால் தான் இப்படிச் செயல்பட முடியும். இதுதான் தாயின் உண்மையான அன்பு.
இன்றைக்கு நம் மரியன்னைக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.
மரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழா. இயேசுக்கிறிஸ்து தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச் சென்றார். “பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்”, “அருள் நிறைந்த பெண்மணி” என்று பெண்குலத்திற்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள தாய்மார்களின் பொக்கிஷமாக திகழ்பவள்தான் நம் மரியன்னை. எனவே அப்படிப்பட்ட அன்னையின் விழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் அவள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறாள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் (கி.பி.858- 867) இவ்விழா வரலாற்றில் என்றும் மறையாத அளவிற்கு திருவழிபாட்டில் ஊன்றச் செய்தார். திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் 1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார். இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், “பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்?” என்பதுதான். இதன்வழியாக அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.
திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் ‘தனது வையக வாழ்வு நிறைவெய்தியவுடன் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார். மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி, மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால், அவள் இயேசுவின் உயிர்ப்பிலும் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும். இது நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும், முன்னடையாளமாகவும் இருக்கும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார், “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பட்டது போன்று நாமும் உயிர்த்தெழுவோம்” என்று உறுதிபடுத்துகிறார். ஆக ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போன்று – அன்னை மரியாளைப் போன்று – இறைவனின் திருவுளத்தின் படி நடக்கின்ற நாம் ஒவ்வொருவருமே விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.
நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் தான் இயேசுவைக் கருவுற்றிருந்த போதிலும், தன்னுடைய உறவினரான எலிசபெத் பேறுகால வேதனையில் தவிக்கிறார் என்பதை அறிந்து ஓடோடிச் சென்று உதவுகிறாள். தூய ஜெரோம் அன்னை மரியாளைக் குறித்துச் சொல்கிறபோது இப்படியாகச் சொல்வார், “அன்னை மரியாள் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது பிறர் படக்கூடிய துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தாள். மேலும் அத்துன்பத்தைக் களைய பெருதும் பாடுபட்டாள்”. ஆம் அன்னை மரியாள் பிறரின் துன்பத்தை தனது துன்பமாகப் பார்த்தார்.
Source: New feed