அர்ச்.சூசையப்பர் நன் மரணம் அடைந்ததினால் அவர் நன் மரணத்திற்கு முன்மாதிரியாகவும், ஆதரவாகவும், அடைக்கலமாகவும் திருச்சைபையில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஒருவன் எப்படி இறப்பானோ அப்படி நித்தியமும் இருப்பான். நல்ல ஆயத்தத்தோடு இறந்தால் மோட்சத்தின் நித்திய இன்பத்தை அடைவான். அகாலமாய் இறந்தால் நரகத்தின் தீயிலே விழுவான். அதனால் நன்மரணம் எல்லா மேலான வரங்களைவிடவும் சிறந்தது. இத்தகைய நன்மை அடைய வேண்டின் ஒருவன் தன் வாழ்நாளெல்லாம் ஆயத்தம் செய்வது அவசியம். இதனை நாம் பெறுவதற்கு நமக்கு முன்மாதிரிகையாகவும் ஆதரவாகவும் அடைக்கலமாகவும் அர்ச்.சூசையப்பர் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
மரணம் நல்ல மரணமாக இருக்கவேண்டிய உதவிகளைச் செய்யக் கூடிய ஒருவரை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சர்வேசுரனிடத்தில் நமக்காக சிபாரிசு செய்து இறை அருளைப் பெற்றுக்கொள்ள செய்வதற்கு மாமரியன்னைக்குப்பின் அர்ச்.சூசையப்பரைப்போல் ஏற்புடையவர் வேறு எவருமிலர். சேசுநாதர் ஒருவனை நரகத்திற்கோ , மோட்சத்திற்கோ தீர்ப்பளிக்கும்போது அர்ச்.சூசையப்பர் மன்றாடினால் அவரது தந்தையின் வேண்டுதலை சேசு கண்டுகொள்ளாமல் இருப்பாரோ! அர்ச்.சூசையப்பரிடத்தில் பக்தி உடையவர்களுக்கு அவர்கள் சாகுமுன் அவர்கள் செய்த பாவங்ளுக்கு மனம் வருந்தி ஒப்பரவு அருட்சாதனம் பெற்று நன்மரணம் அடைய செய்வார் என்பதில் சந்தேகமில்லை என அர்ச்.பிரான்சிஸ் சலேசியார் எழுதியுள்ளார்
மரண தறுவாயில் பிசாசுகள் மனிதனை பாவஞ்செய்யத்தூண்டும் போது மனிதன் அவற்றின் பிடியிலிருந்து தப்ப அர்ச்.சூசையப்பரின் அடைக்கலத்தை நாடினால் பிசாசுகளுக்கு பயப்படாமல் நன்மரணம் அடையலாம். எனவே வாழ்நாளில் அர்ச்.சூசையப்பரிடம் பக்தி கொண்டு அவரது அடைக்கலத்தில் இருந்தால் நன்மரணம் அடைவார்கள் என்பது உறுதி என நம்பிக்கை வைத்து அவரது அடைக்கலத்தில் இருப்போம்.
நாம் அனைவரும் நன்மரணத்தையே விரும்புகிறோம். எனவே நன்மரணத்திற்கு மாதிரிகையும் ஆறுதலும், அடைக்கலமுமாயிருக்கிற அர்ச்.சூசையப்பரிடம் பக்தியாய் இருக்கவேண்டும். அப்போது அர்ச்.சூசையப்பர் மீது பக்தி கொண்டவர்கள் நன் மரணம் அடைந்தது போல் நாமும் நன்மரணமடைவோம் என்பதில் சந்தேகமில்லை. நாம் மட்டுமின்றி நமது பிள்ளைகள், உற்றார் உறவினரும் அர்ச்.சூசையப்பரை தங்களுக்கு ஆதரவாக கொண்டால் நன் மரணம் அடையலாம்
எல்லா மேலான நன்மைகளைவிடவும் நன்மரணம் மேலானதால் நல்ல மரணம் கிடைக்க நன்மரண ஆயத்த சபை நிறுவப்பட்டிருக்கிறது இச்சபையில் சேர்ந்தவர்களுக்கு நன்மரணம் கிடைக்க வழிவகை செய்வது இச்சபையின் நோக்கம். இச்சபையினர் அர்ச்.சூசையப்பரை தங்கள் விசேஷ பாதுகாவலராக கொண்டுள்ளனர். இச்சபையின் மூலம் பலர் பல நன்மைகள் அடைந்ததாலும் பலர் மனந்திரும்பியதாலும் பாப்பானவர் பல நன்மைகளையும் பலன்களையும் இச்சபைக்கு அளித்துள்ளார். இச்சபையின் தலைமை இடம் ரோம் நகரில் இருக்கும் சேசு ஆலயத்தில் இருந்தாலும் உலகின் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது
நாமும் இச்சபையில் சேரவிரும்பினால் இச்சபை நிறுவியுள்ள ஆலயத்தில் அதற்கு அதிகாரம் பெற்ற குருவிடம் நம் பெயரை எழுதிக் கொடுத்தால் போதுமானது. இதற்காக சில செபங்களும் ஆயத்தங்களும் அதில் அடங்கி இருக்கிறது. எப்போது மரணம் வரும் என தெரியாததால் அர்ச்.சூசையப்பரின் அடைக்கலத்தில் இருந்து கொண்டு நாம் நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறை ஒப்பரவு அருட்சாதனத்தைப் பெறும்போதும் இதுதான் கடைசி ஒப்புரவு என எண்ணி பாவங்களை ஒளிக்காது உண்மையாக செய்வோமாக!
புதுமை
உலகில் ஊமை, செவிடாகப் பிறப்பது மிகவும் கொடுமையானது ஐரோப்பாவில் சில துறவற இல்லங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவர்களது குறைப்பாட்டினைப் போக்க முயன்று வருகிறது. இந்த துறவற சபையில் பிறவிகுறை ஆண்களை கண்காணிக்க ஆண்துறவிகளையும், பெண்களை கண்காணிக்க பெண்துறவிகளையும் நியமித்துள்ளது. இவர்களுக்கு தங்கள் கைகளையும் விரல்களையும் கொண்டு சைகை மூலம் பேசவும் தங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பார்கள். இப்படி இந்த ஊமை மற்றும் செவிடர்கள் சத்திய மறையைப் படித்து ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று நல்லவர்களாய் நடக்கிறார்கள். இதைப்போல் 30 பெண்களுக்கு ஒரு பெண்துறவி பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தார். இவர்களுக்கு உணவு, உடை நன்முறையில் அளித்து வந்ததில் ரூ. 400/- கடன்படவேண்டியிருந்தது. இந்த பணத்திற்காக இவர்களை விட்டு விடக் கூடாதென்று அக்கன்னிகை அர்ச்.சூசையப்பரிடம் மன்றாடினார்
அவர் அர்ச்.சூசையப்பருக்கு விண்ணப்பம் எழுதி அதனை அவரது சுரூபத்தின் பாதத்தில் விசுவாசத்தோடு வைத்தார். “நல்ல தந்தையாகிய அர்ச்.சூசையப்பரே! நான் படுகிற துன்பங்களை காண்கிறீரே! இந்த ஏழைப் பெண்களுக்குத் தாயாக இருக்கிறேன். ஆனால் நான் மிகவும் ஏழையாக இருப்பதால் இவர்களை கவனிக்க இனியும் என்னால் இயலாது நீர் திருக்குடும்பத்திற்கு தலைவராக இருந்து இப்பூவுலகில் வறுமையில் துன்பமடைந்தீரே. எனக்கு இரங்கி என் துன்பங்களைப் போக்கியருளும் என் கடனை அடைக்க ரூ. 400/- தேவைப்படுவதுமல்லாமல், என் பிள்ளைகள் செய்யத்தக்க வேலைகளும் வரவேண்டும். எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டால் இந்த பிள்ளைகளும் பிழைப்பார்கள். நானும் பிழைப்பேன். நல்ல தந்தையே! நான் விரும்பியதைத் தேவரீர் கொடுப்பதன் பேரில் உமக்கு ஒரு அழியா திருச்சுரூபத்தை ஸ்தாபிக்கவும் உமது வணக்கமாதத்தினை மிகவும் பக்தியோடு அனுசரிக்கவும் நேர்ந்துகொள்கிறேன். அப்போது தந்தையே உம்மை இந்த இல்லமும் பிள்ளைகளும் நல்தந்தையாக எப்போதும் கொண்டாடுவர்” என எளிய விண்ணப்பத்தை எழுதினாள்
இவ்விண்ணப்பம் எழுதிய நான்கைந்து நாட்களுக்குப்பின் ஒரு மனிதர்
வந்து ரூ. 240 கொடுத்து இதை வைத்துக்கொள்ளுங்கள் யாரிடமும் சொல்லவேண்டாம் என்றார். வேறொருவர் வழியாக ரூ. 760/- கிடைத்தது. பெண்களுக்கும் குறையாத வேலைகளும் வந்தது. இவ்வாறாக கடனும் அடைபட்டு, துறவற இல்லமும் செழித்தது. அக்கன்னிகை நேர்ந்தது போல் அர்ச்.சூசையப்பரின் திருஉருவத்தை ஸ்தாபித்து அவரை வணங்கி அவரது உதவியைப் பாராட்டி வருடந்தோறும் வணக்கமாதத்தினை சிறப்பாக கொண்டாடி வந்தார்கள்
கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு வரும் துன்பங்களில் அர்ச்.சூசையப்பரை மிகவும் பக்தியோடு வணங்கிவந்தால் அவர் நமக்கு உதவுவார் என அறிவோம்
Source: New feed