அன்பு நண்பர்களே, மொராக்கோ அரசில் உங்களை சந்திக்கவும், உங்களோடு என் நெருக்கத்தை வெளிப்படுத்தவும் கிடைத்த இந்த வாய்ப்பைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். புலம் பெயர்தல், மற்றும் குடிபெயர்தல் ஆகியவை 21ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இவ்வுலகை துன்புறுத்திவரும் ஓர் ஆழமான காயம். இந்த வேதனைச் சூழல் குறித்து யாரும் அக்கறையின்றி இருக்க இயலாது. நம் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்வை உருவாக்கித் தருவது நம் அனைவரின் கடமை.
பாதுகாப்பான, ஒழுங்கான குடிபெயர்தலைக் குறித்த ஓர் ஒப்பந்தம், சில மாதங்களுக்கு முன், மொராக்கோ நாட்டின் மரக்கேஷ் நகரில், கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம், புலம் பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோரைக் குறித்து மட்டும் பேசவில்லை, மாறாக, நம் அனைவரைக்குறித்தும் பேசுகிறது.
நம் சமுதாயம், தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் அடைந்துள்ள பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து பெருமை கொள்ளலாம். ஆனால், மனித வாழ்வை மையப்படுத்தி நடைபெறும் முன்னேற்றங்களே, உண்மையான முன்னேற்றங்கள். நம் தனிப்பட்ட மகிழ்வை மட்டுமே மையப்படுத்தி, மற்றவர்கள் துன்பத்தை காண மறுக்கும் முன்னேற்றங்களையே இன்றைய உலகம் முதன்மைப்படுத்துகிறது. பரிவை இழந்து முன்னேற்றம் அடையும் ஒரு பெரு நகரம், உலர்ந்துபோன, இதயமற்ற, சமுதாயமாக, குழந்தைப்பேறு அற்ற தாயாக மாறிவிடும்! குடிபெயர்ந்து வாழும் நீங்கள் சமுதாயத்தின் விளிம்பில் வாழவில்லை, மாறாக, திருஅவையின் இதயத்தில் வாழ்கிறீர்கள்.
புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் குறித்த ஒப்பந்தம், ஏற்பது, காப்பது, முன்னேற்றுவது, இணைப்பது என்ற நான்கு வினைச்சொற்களைக் கொண்டு செயல்படவேண்டும்.
ஏற்பது, அல்லது, வரவேற்பது என்று சொல்லும்போது, அது, புலம்பெயர்ந்தோரையும், குடிபெயர்ந்தோரையும் வரவேற்க, மேலும், மேலும் பல வழிகளைத் திறப்பதாகும். இவ்வாறு நாம் செய்யத் தவறினால், மனித வர்த்தகத்தை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதற்குச் சமம்.
காப்பது என்றால், குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் வரும் வழிகளில் நடைபெறும் வன்முறைகளைத் தடுத்து, அவர்களுக்குத் தேவையான சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்குவதாகும். இத்தகைய பாதுகாப்பு, இம்மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும்.
முன்னேற்றுவது என்றால், குடிமக்களும், குடிபெயர்ந்தோரும் இணையாக வாழும் ஒரு சூழலை உருவாக்கித் தருவதாகும். ஒவ்வொரு மனிதரும் மாண்புடையவர்கள் என்ற அடிப்படை உண்மையின் மீது, முன்னேற்றுவது என்ற செயல்பாடு மேற்கொள்ளப்படவேண்டும்.
இணைப்பது என்று சொல்லும்போது, குடிபெயர்ந்தோர் மற்றும் குடிமக்கள் இருவரும் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரங்களை மதித்து, ஒருவரையொருவர் ஏற்று வாழ்வதாகும். இத்தகையச் சூழலில், ஒருங்கிணைந்த, செறிவு மிகுந்த கலாச்சாரம் உருவாக வாய்ப்புண்டு.
எனவே, நாம் இணைந்து மேற்கொள்ளவேண்டிய பயணம் ஒன்று உள்ளது. இந்தப் பயணத்தில், குடிமக்கள், குடிபெயர்ந்தோர் அனைவரும் இணைந்து, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க முயல்கிறோம்.
குடிபெயர்ந்துள்ள நண்பர்களே, உங்கள் துயரங்களை, திருஅவை நன்கு உணர்ந்துள்ளது. உங்களோடு பயணிக்கவும், உங்களோடு இணைந்து துன்பங்களைத் தாங்கவும் தயாராக உள்ளது. நம் ‘பொதுவான இல்லத்தில்’ அனைவரும் வாழவும், கனவுகள் காணவும், எதிர்காலத்தை உருவாக்கவும் உரிமைகள் கொண்டிருக்கிறோம்.
குடிபெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். சிறப்பாக, காரித்தாஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. இறைவனின் இரக்கத்தை நம் சகோதரர், சகோதரிகளுக்குக் காட்டும் பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்.
தன் வாழ்நாளில், அந்நிய நாட்டில் குடிபெயர்தல் என்ற துன்பத்தை உணர்ந்த ஆண்டவர், உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! நீங்கள் நம்பிக்கை இழக்காமல், அதே வேளையில், ஒருவருக்கொருவர் புகலிடமாகத் திகழ, அவர் உங்களுக்கு சக்தி வழங்குவாராக!
Source: New feed