அரசியல், அமைதிக்குப் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற சனவரி முதல் நாளில் சிறப்பிக்கப்படும் உலக அமைதி நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தி, டிசம்பர் 18, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
‘இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக!’ (லூக்.10,5) என, தம் சீடர்களை நற்செய்தி பணியாற்ற அனுப்பியவேளையில், இயேசு கூறிய திருச்சொற்களால் இச்செய்தியைத் துவங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவையே, புதிய ஆண்டிற்குத் தன் வாழ்த்தாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
இயேசு குறிப்பிடும் வீடு என்பது, ஒவ்வொரு குடும்பம், சமூகம், நாடு, கண்டம் ஆகிய அனைத்தையும், எவ்வித பாகுபாடும் இன்றி ஒவ்வொரு மனிதரையும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியையும் குறிக்கின்றது என்று, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
நல்ல அரசியலின் சவால்
நல்ல அரசியலின் சவால், மனித உரிமைகள் மற்றும் அமைதியின் பணியில் அரசியலுக்கு அடித்தளமாக இருப்பது, பிறரன்பும், மனிதப் பண்புகளும், அரசியல் குற்றங்கள், நல்ல அரசியலில் இளையோரின் பங்கை ஊக்குவித்தல், மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல், போரைத் தவிர்த்தல் மற்றும் போருக்குரிய அச்சத்தை அகற்றுதல், அமைதிக்கு மாபெரும் திட்டம் போன்ற தலைப்புகளில், திருத்தந்தை இச்செய்தியை எழுதியுள்ளார்.
தங்கள் நாட்டில் வாழ்வோரைப் பாதுகாத்து, அவர்களுக்கு மதிப்புமிக்க நிலைகளையும், நியாயமான வருங்காலத்தையும் அமைத்துக் கொடுப்பதற்கு, அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டிய சவாலை, அரசியலில் இருப்பவர்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனது அழைப்புக்கேற்ப, பிறரன்பை நடைமுறைப்படுத்த அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்குப் பணியாற்றும் நல்ல அரசியல், மனிதரின் அடிப்படை உரிமைகளை மதித்து ஊக்குவிப்பதாகும், அதேநேரம், தற்போதைய மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்கு இடையே நம்பிக்கையும், நன்றியுணர்வும் வளருவதற்கு உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல அரசியல்வாதியின் பண்புகள்
நல்ல அரசியல்வாதியின் பண்புகளை எடுத்துக்காட்டுவதாய், வியட்நாம் கர்தினால் நுகுயென் வான் துவான் அவர்கள் பரிந்துரைத்த, அரசியல்வாதியின் எட்டு பேறுகளையும் திருத்தந்தை எழுதியுள்ளார்.
அரசியலின் நற்பண்புகள் மற்றும் குறைகள் பற்றியும், உலக அமைதி நாள் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, பல்வேறு வடிவங்களில் இடம்பெறும் ஊழல்கள், தனிமனிதர் சுரண்டப்படல், உரிமைகள் மறுக்கப்படல், வலுவந்தமாய்ப் பறிக்கப்படும் அதிகாரத்திற்கு நியாயம் சொல்லுதல், பொது வளங்களைத் தவறாகக் கையாள்தல் போன்ற அரசியல் குற்றங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல அரசியலில் இளையோரின் பங்கை ஊக்குவித்தல்
இளையோரின் திறமைகளும், அவர்களின் ஏக்கங்களும் ஊக்குவிக்கப்படும்போது, அவர்களின் கண்ணோட்டத்திலும், முகங்களிலும் அமைதி வளரும் எனவும், ஒவ்வொரு தனிமனிதரின் திறமைகள் அங்கீகரிக்கப்படும்போது, அரசியல் அமைதிக்குப் பணியாற்றுவதாக அமையும் என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
முதல் உலகப் போர் முடிவடைந்து நூறு ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில், போர்களில் இறந்த இளையோர் மற்றும் பொதுமக்களை நினைத்துப் பார்க்கிறோம், இந்த உடன்பிறப்பு போர்கள் கற்றுக்கொடுத்துள்ள பயங்கரமான பாடங்கள் பற்றி, நாம் என்றும் நினைவில் வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டதன் எழுபதாம் ஆண்டை இந்நாள்களில் சிறப்பித்துவரும் நாம், ‘ஒரு மனிதரின் உரிமைகள் மதிக்கப்படும்போது, மற்றவர்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற கடமையுணர்வை அவன் பெற வேண்டியது அவசியம்’ என்று புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்வோம் என்றும், திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
மனிதர் அனைவரும் ஒருவர் ஒருவரைச் சார்ந்து, ஒவ்வொருவரின் கடமையை உணர்ந்து வாழவேண்டியதன் அவசியத்தையும், மனமாற்றத்தையும், வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் அரசியாம் அன்னை மரியா பாடிய புகழ் பாடலிலிருந்து, அமைதியின் அரசியல் எப்போதும் தூண்டுதல் பெறலாம் எனவும், தனது செய்தியில் கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு சனவரி முதல் நாள் சிறப்பிக்கப்படும், 52வது உலக அமைதி நாளுக்கென “அமைதிப் பணியில் நல்ல அரசியல்” என்ற தலைப்பில், திருத்தந்தை எழுதியுள்ள செய்தியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் மற்றும், அந்த அவையின் செயலர் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.
Source: New feed