திருத்தந்தையின் தர்மப்பணித் துறை, 2018ம் ஆண்டு, 35 இலட்சம் யூரோக்கள், அதாவது, 27 கோடியே 53 இலட்சம் இந்திய ரூபாய்கள் நிதி உதவியை, வறியோருக்கு வழங்கியுள்ளது என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.
மே 15, இப்புதனன்று வத்திக்கான் செய்தித்துறை வெளியிட்ட ஒரு கட்டுரையில், வறியோருக்கு துவக்கத்திலிருந்து உதவிகள் செய்துவந்துள்ள திருஅவையைக் குறித்து, பல்வேறு வரலாற்று குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
வறியோர் மீது இயேசு கொண்டிருந்த அக்கறையை, திருத்தூதர்கள், தங்கள் பணியில் தொடர்ந்தனர் என்பதை, “தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ‘நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்’ என்பாரென்றால், அதனால் பயன் என்ன?” (யாக்கோபு 2:14-16) என்ற சொற்கள் உணர்த்துகின்றன.
வறியோருக்குப் பணியாற்றுவது, துவக்க கால திருஅவையில், தியாக்கோன்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும், ‘தர்மப்பணியாற்றுவோர்’ என்ற பொறுப்பு, 13ம் நூற்றாண்டில், திருத்தந்தை 3ம் இன்னொசென்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.
திருத்தந்தையின் ஆசீரை, சிறப்பான காகித ஓலைகளில் வழங்கி, அதன் வழியே திரட்டப்படும் நிதி, வறியோரின் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மரபு, 19ம் நூற்றாண்டில் திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் காலத்தில் உருவானது.
வறியோரின் வீட்டு வாடகை, மின் கட்டணம், மருத்துவத் தேவைகள் ஆகிய பல்வேறு காரணங்களுக்காக திருத்தந்தையின் பெயரால் நிதி உதவியை வழங்கும் பொறுப்பு, தற்போது கர்தினால் Konrad Krajewski அவர்களைச் சார்ந்தது.
பொதுவாக, உலகெங்கிலும் உள்ள பங்கு அருள்பணியாளர்கள், தங்கள் பங்கிலுள்ள வறியோரின் தேவைகளை உணர்த்தும் மடல்களை, திருத்தந்தையின் தர்மப்பணிகள் துறைக்கு அனுப்பி வைக்க, இத்துறையிலிருந்து, பங்கு அருள்பணியாளர்கள் வழியே, இந்த உதவிகள் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் அமைதியாக நடைபெறும் திருத்தந்தையின் தர்மப்பணிகள், வறியோரின் உணவு, மருத்துவச் செலவு, அவர்கள் தங்குமிடம் ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக செயலாற்றிவருகின்றன.
Source: New feed