திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் செயல்படும் மருத்துவமனைக் கப்பல், தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றங்கரையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவிகளை ஆற்றி வருவதாக இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
ஏற்கனவே அமேசான் பகுதி மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவரும், திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவனைக் கப்பல், தற்போது இந்த கொரோனா தொற்றுநோய்க் காலத்தில், பழங்குடி மக்களின் வாழ்வைக் காப்பாற்றும் சிறப்புச் சேவையை ஆற்றிவருவதாகத் தெரிவித்தார், அக்கப்பல் வழியாக பணியாற்றும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த அருள்சகோதரர் Joel Sousa.
திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனைக் கப்பல், கடந்த ஓராண்டளவாக அமேசான் பகுதியில் வாழும் ஏறத்தாழ 7 இலட்சம் மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவரும் நிலையில், தற்போது, கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையையும் துவக்கியுள்ளது.
அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்கனவே துன்பங்களை அனுபவித்துவரும் பழங்குடி மக்கள் தற்போது, இத்தொற்று நோயாலும் துயர்களை அனுபவித்துவருவதாகக் கூறும் திருஅவைத் தலைவர்கள், அம்மக்கள் வாழும் பகுதியில் மருத்துவ உதவி மையங்கள் இன்மையால், அவர்களிடையே மரணங்கள் அதிகரித்துவருகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.
கோவிட்-19 நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதுடன், தொற்றுநோய் பாதிப்பின் துவக்கநிலையில் இருக்கும் மக்களுக்கு ஆலோசனைகளையும், மருந்துக்களையும் இலவசமாக வழங்கி உதவிவருகிறது இந்த மருத்துவமனைக் கப்பல்.
கடந்த ஆண்டு ஜூலை முதல், அமேசான் ஆற்றுப்பகுதியில் வாழும் சமுதாயங்களில் பணியாற்றிவரும் இந்த 32 மீட்டர் நீளமுடைய பெரிய படகில், 23 மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ ஆய்வாளர்கள், மருத்துவப்பணியாளர்கள் ஆகியோர், உள்ளேயே தங்கியிருந்து பணியாற்றிவருகின்றனர்.
Source: New feed