இத்திங்கள், ஐக்கிய அரபு அமீரகத் திருத்தூதுப் பயணத்திற்கு முக்கிய நாள் எனச் சொல்லலாம். 27வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, அபு தாபி சென்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை 8.45 மணிக்கு Al Mushrif அரண்மனையில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அங்கிருந்து 9.6 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் சென்றார். Ras al Akhdar தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த அரண்மனை, 370 ஏக்கரில், 160 சதுர மைல் பரப்பளவில், 2017ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. தோட்டங்களாலும், நீர் ஊற்றுக்களாலும் மொசைக் கலைவண்ணத்தில் மிக அழகாக இது காட்சியளிக்கின்றது. அரசுத்தலைவர், உதவி அரசுத்தலைவர், அமைச்சர்கள், வாரிசு இளவரசர் போன்றோரின் அலுவலகங்கள் இங்கு உள்ளன. இந்த அரண்மனைக்குத் திருத்தந்தை சென்ற வேளையில், இராணுவ விமானம், வானில் பறந்து, வத்திக்கான் கொடியின் வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தில், அழகாக, புகையைப் பரப்பிச் சென்றது. திருத்தந்தை சென்ற சாதாரண கியா காரின் இருபக்கங்களிலும், பாதுகாப்பிற்கென, 12 குதிரை வீரர்கள், அமீரக மற்றும் வத்திக்கான் கொடிகளுடன், அணிவகுத்துச் சென்றனர். திருத்தந்தை மாளிகையை நெருங்கியபோது, மத்தியக் கிழக்குப் பகுதியின் பழமை வாய்ந்த குழல் இசைக்கருவியான bagpipe வழியே, இன்னிசை எழுப்பப்ட்டது. திருத்தந்தையை, வாரிசு இளவரசர், மாளிகைக்குள் அழைத்துச் சென்றார். அந்த மாளிகையில் துப்பாக்கிகள் முழங்க, அதிகாரப்பூர்வ வரவேற்பு, திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது.
“உங்களின் இனிய வரவேற்பிற்கும், விருந்தோம்பல் பண்பிற்கும், மிக்க நன்றி. எனது செபங்களில் உங்களை நினைவுகூர்கிறேன் என்பதற்கு உறுதியளிக்கின்றேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர், மற்றும், அந்நாட்டு மக்கள் அனைவர்மீதும், அமைதி மற்றும் உடன்பிறந்த தோழமையுணர்வின் இறையாசீர் பொழியப்பட செபிக்கின்றேன்” என்று, அந்த மாளிகையிலுள்ள தங்கப் புத்தகத்தில், எழுதி, கையெழுத்திட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், 800 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1219ம் ஆண்டில், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களும், சுல்தான் al-Malik al Kāmil அவர்களும் சந்தித்த நிகழ்வைச் சித்திரிக்கும் பெரியதொரு அழகான படத்தை, இளவரசருக்குப் பரிசாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐக்கிய அரபு அமீரகத்தில், முதல் கத்தோலிக்க ஆலயம் கட்டுவதற்கு, 1963ம் ஆண்டு, ஜூன் 22ம் தேதி, நன்கொடையாக நிலம் வழங்கப்பட்டதைக் குறிக்கும் அரசு ஆணையை, வாரிசு இளவரசர், திருத்தந்தைக்கு, பரிசாக அளித்தார். அரசுத்தலைவர் மாளிகையில் சந்திப்பை நிறைவு செய்து, Al Mushrif அரண்மனைக்குச் சென்று, மதிய உணவருந்தி, சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed