அண்மை நாட்களில் ஹங்கேரி தலைநகரில் இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த அனைத்துலக நற்கருணை மாநாடு குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட் கொள்ளைநோய் பரவலுக்கு முன் திட்டமிடப்பட்டு, இந்நோயின் காரணமாக அடுத்த ஆண்டில் Budapest நகரில் இடம்பெற உள்ளதாக தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், அதுபற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆன்மீக நிகழ்வுக்காக விசுவாசத்துடனும் மகிழ்ச்சியுடனும் காத்திருந்த அனைத்து மக்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
2021ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை, Budapest நகரில் நடைபெறவுள்ள, இந்நிகழ்வுக்காக, ஆன்மீகத்தில் ஒன்றிணைந்து தயாரிப்போம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை.
திருஅவையின் வாழ்வு, மற்றும், மறைப்பணிகளின் ஆதாரமாக இருக்கும் திருநற்கருணையின் இந்த அனைத்துலக மாநாட்டுக்காக தயாரிப்போம் எனவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இளையோரை தயாரிப்பதில் அக்கறையுடன் செயல்பட்டுவரும் இத்தாலியின் திரு இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழக நாள், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அதற்கு தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை.
வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுக்கு தங்கள் கதவுகளைத் திறக்கும் திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.
Source: New feed