
அணு ஆயுதங்களற்ற ஓர் உலகை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சனவரி 22, இவ்வெள்ளியன்று உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (TPNW) செயல்முறைக்கு வந்துள்ளதையொட்டி, அமைதி #peace என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“இன்று மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படும் அமைதி மற்றும், நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்ப்பதற்கு உதவிசெய்து, அணு ஆயுதங்களற்ற ஓர் உலகை அமைப்பதற்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் ஊக்குவிக்க, அனைத்து நாடுகளும், மக்களும் உறுதியுடன் பணியாற்றுமாறு ஊக்கப்படுத்துகிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.
போர், ஒருபோதும் வேண்டாம்
2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில், போர், ஒருபோதும் வேண்டாம், ஆயுதமோதல்கள் இனிமேல் ஒருபோதும் வேண்டாம், இவ்வளவு துன்பங்கள் ஒருபோதும் வேண்டாம், அணு ஆயுதங்களற்ற உலகு தேவை என்று மனதுருகி விண்ணப்பித்தார்.
அந்த நாளுக்குப்பின் 11 மாதங்கள் சென்று, கடந்த அக்டோபரில் கொண்டூராஸ் நாடு, அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் உலக அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தேவையான எண்ணிக்கை கிடைத்துள்ளது
கிறிஸ்தவ ஒன்றிப்பு
மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை மையப்படுத்தி, இறைவேண்டல் #Prayer, கிறிஸ்தவ ஒன்றிப்பு #ChristianUnity ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“இந்த கடினமான காலக்கட்டத்தில், கிறிஸ்தவர்கள் மத்தியில், ஒன்றிப்பு, இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகின்றது, ஒன்றிப்பே, மோதல்களை வெற்றிகொள்ள முடியும். கிறிஸ்தவர்கள், காணக்கூடிய முறையில் முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் தொடர்ந்து செல்வதற்கு, நல்ல முன்மாதிரிகை அடிப்படையானது” என்ற சொற்கள் திருத்தந்தையின், டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று வெளியாயின.
Source: New feed