உலகின் உணவு நிலைகளைப் பொருத்தவரையில் 2021ம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் WFP எனும் உலக உணவு நிறுவனத்தின் தலைவர் David Beasley.
கடந்த மாதம் நொபெல் அமைதி விருதைப்பெற்ற ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் தலைவர், AP செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், இந்த ஆண்டை விட, அடுத்த ஆண்டு, மிக மோசமானதாக இருக்கும் எனவும், 2021ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட்டு, அதனைச் சமாளிக்க, பல பில்லியன் டாலர் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும், கவலையை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் வறுமையில் வாடும் நபர்களுக்கு 52 ஆண்டுகளாக உணவு பாதுகாப்பை உறுதி செய்ததற்காக, நோபல் விருதைப்பெற்றுள்ள இந்த அமைப்பு, உலக நாடுகளின் தலைவர்களின் பொருளாதார உதவி, மற்றும், பிற உதவிகள் வழியாக 2020ம் ஆண்டில் பஞ்சத்தை ஓரளவிற்கு தவிர்க்க முடிந்தது, என்றார் Beasley.
FAO எனப்படும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வின்படி, அடுத்த சில மாதங்களில், ஏமன், தெற்கு சூடான், வடகிழக்கு நைஜீரியா, புர்கினா பாசோ உள்ளிட்ட 20 நாடுகளில், அதிகக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை உருவாகும் ஆபத்து உள்ளது எனவும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டிற்கென 1500 கோடி டாலர்கள் தேவைப்படுவதாகவும், இதில் 500 கோடி டாலர்கள் பஞ்சத்தை தடுக்கவும், மீதியுள்ள 1000 கோடி, வழக்கமான உலக உணவு திட்டங்களுக்கு எனவும் தேவைப்படுவதாக மேலும் கூறினார் WFP நிறுவனத் தலைவர் Beasley
Source: New feed