எனக்கு அடுத்திருப்பவர் யார்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37
அக்காலத்தில்
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.
அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.
மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” என்றார்.
“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————
லூக்கா 10: 25-37
“நீரும் அடுத்திருப்பவராய் இரும்”
நிகழ்வு
யூத இரபியான மோசஸைப் பற்றிச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
அன்று இரபி மோசஸ் வழக்கமாகப் போதிக்கும் தொழுகைக்கூடத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் மக்கள் அனைவரும் அங்குத் திரளாகக் கூடியிருந்தார்கள். தொழுகை நடக்கும் நேரம் வந்தது. இரபி மோசஸ் அங்கு வரவில்லை.
நேரம் கடந்துகொண்ட போனது. இரபி மோசஸ் அப்பொழுதும் வராததால், தொழுகைக் கூடத்தில் இருந்தவர்கள், “நாம் தொழுகையைத் தொடங்குவோம். இரபி மோசஸ் இடையில் வந்து தொழுகையில் கலந்துகொள்ளட்டும்” என்று பேசி முடிவெடுத்துவிட்டு, தொழுகையைத் தொடங்கினார்கள். தொழுகை பாதி நடந்திருக்கும், அப்பொழுது இரபி மோசஸ் தொழுகையில் வந்து கலந்துகொண்டார். பின்னர் தொழுகை வழக்கம் போல் தொடர்ந்தது.
தொழுகை நடந்து முடிந்ததும், எல்லாரும் இரபி மோசஸிடம் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “இன்றைக்கு நம்முடைய தொழுகைக்கூடத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். பிறகு எதற்குத் தொழுகைக்கு இவ்வளவு தாமதமாக வந்தீர்கள்?” என்றார்கள். அதற்கு அவர், “இன்றைக்கு நம்முடைய தொழுகைக்கூடத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்று எனக்கு நன்றாகவே தெரியும்; ஆனால், வரும் வழியில் ஒரு குடிசை வீட்டிலிருந்து குழந்தை ஒன்று அழுகின்ற சத்தம் கேட்டது. என்னால் அந்தக் குழந்தையை அப்படியே அழவிட்டுவிட்டுத் தொழுகைக்கூடத்திற்கு வரமுடியவில்லை; அந்தக் குழந்தையின் தாய் வெளியே எங்கோ போயிருந்தது தெரிந்தது. அதனால் நான் அந்த வீட்டினுள்ளே சென்று, தாலாட்டுப் பாடி, குழந்தையைச் சாந்தப்படுத்தி, தூங்க வைத்தேன். குழந்தை நன்றாக உறங்கிவிட்டது என்று தெரிந்ததும், அங்கிருந்து கிளம்பி வந்தேன். அதனால்தான் தாமதம்” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் அவர்களிடம், “தொழுகை முக்கியம்தான்; ஆனால், அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அமைதிப் படுத்துவது அல்லது தேவையில் உள்ள ஒருவருக்கு உதவுவது அதைவிட முக்கியம்” என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற இரபி மோசஸ் அழுதுகொண்டிருந்த குழந்தையை அமைதிப்படுத்தி அல்லது தேவையில் உள்ளவருக்கு உதவி செய்து நல்ல சமாயரியராய், அடுத்திருப்பவராய் விளங்கினார். இன்றைய நற்செய்தி வாசமும் நாம் நல்ல சமாரியராக, அடுத்திருப்பவராக வாழ அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி நல்ல சமாரியராக, அடுத்திருப்பவராக வாழலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பிறரன்பு, இறையன்புக்கு இணையான கட்டளை என்பதை உணர மறுத்தவர்கள்
இன்றைய நற்செய்தி வாசகம், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், “நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேள்வி கேட்பதோடு தொடங்குகின்றது. வழக்கமாக இயேசு தன்னிடம் கேள்வி கேட்பவரிடம் திரும்ப ஒரு கேள்வியைக் கேட்டு, பதில் அளிப்பார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அதுதான் நடக்கின்றது. நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்ட திருச்சட்ட அறிஞரிடம் இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதி இருக்கின்றது?” என்று கேட்க, அவர் அதற்கான பதிலைச் சொல்ல, இயேசு அவரிடம், “அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்கிறார். ஆனால்; திருச்சட்ட அறிஞர் தன்னை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்டதும்தான், இயேசு அவரிடம் நல்ல சமாரியர் உவமையைச் சொல்கின்றார்.
இயேசு சொல்லும் நல்ல சமாரியர் உவமையில் வருகின்ற குருவும் லேவியும், கள்வர்கள் கையில் அகப்பட்டுக் குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு உதவி செய்யாமல் தங்கள் வழியில் செல்கின்றார்கள். இவர்கள் இறையன்புக்கு இணையான, “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்ற கட்டளையை நன்றாக அறிந்திருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் அடிபட்டுக் கிடப்பவருக்கு உதவாமல் தங்கள் வழியில் செல்கின்றார்கள்.
பிறரன்பு, இறையன்புக்கு இணையானது என்பதை உணர்ந்த சமாரியர்
உவமையில் வரும் குருவும் லேவியும் குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு உதவி செய்யாமல் சென்றபொழுது, யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சமாரியர், தனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று அடிபட்டுக் கிடந்தவருக்கு உதவுகின்றார். இவ்வாறு சமாரியர். நல்ல சமாரியராக மாறுகின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டுத் திருச்சட்ட அறிஞரிடம் அடுத்திருப்பவராகச் செயல்பட்ட நல்ல சமாரியரைப் போன்று செயல்படும் என்கின்றார்.
இயேசு திருச்சட்ட அறிஞருக்கு யார் அடுத்திருப்பவர் என்பதற்கான விளக்கத்தைத் தந்தது மட்டுமல்லாமல், அவரே அடுத்திருப்பவராக இருக்க வேண்டும் என்கிறார். ஆகையால், நாம் இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர்ந்து, அடுத்திருப்பவர்களாய் வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ (உரோ 13: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அன்பே திருச்சட்டத்தின் நிறைவு என்பதை உணர்ந்து, தேவையில் உள்ள யாருக்கும் உதவி செய்து, நல்ல சமாரியர்களாக, அடுத்திருப்பவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed