அக்டோபர் 4 : நற்செய்தி வாசகம்
வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43
அக்காலத்தில்
இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக் குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்.
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.
அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், “ ‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
பலன்தரும் பணியாளர்களாவோம்
பொதுக்காலம் 27ஆம் வாரம் – ஞாயிறு
I எசாயா 5: 1-7
II பிலிப்பியர் 4: 6-9
III மத்தேயு 21: 33-43
பலன்தரும் பணியாளர்களாவோம்
நிகழ்வு
வயதானவர் ஒருவர் ஒரு பெரிய வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக இருந்த பெரிய கதவில் ‘வேலைக்கு ஆள் தேவை’ என்றோர் அறிவிப்புப் பலகையை மாட்டி வைத்திருந்தார். இதைப் படித்துப் பார்த்த ஜான் என்ற இளைஞன், ‘வீட்டில் வெட்டியாக இருப்பதற்குப் பதில், இந்த வயதானவருடைய வீட்டில் வேலை செய்தால்கூட செலவுக்கு ஏதாவது பணம் கிடைக்கும்’ என நினைத்துக்கொண்டு, மறுநாள் வயதானவரைப் பார்க்கச் சென்றான். வயதானவர் ஜானிடம், அவன் யார்? அவனுடைய வீடு எங்கிருக்கின்றது என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்பு, அவனிடம் “தம்பி! மாடியில் உள்ள அறையை நீண்டநாள்களாகப் பயன்படுத்தாமல் போட்டுவிட்டதால், அதில் ஒரே தூசும் நூலாம்படையும் மண்டிக் கிடக்கின்றன. இதனால் அங்கு எலித் தொல்லைகூட மிகுதியாக இருக்கின்றது. இன்று நீ செய்யவேண்டியதெல்லாம் அந்த அறையைச் சுத்தம் செய்து, அறையில் உள்ள தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை அந்த அறையில் உள்ள பெரிய பெட்டியில் போட்டு, வெளியே கொண்டுவந்து, தீயில் போட்டு எரித்துவிடு” என்றார். ஜானும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு மாடியிலிருந்த அறைக்குச் சென்றான்.
ஜான் அடிப்படையில் ஒரு சோம்பேறி. அதனால் அவன் மாடியில் இருந்த அறையைப் பார்த்ததும் மயக்கமுறத் தொடங்கினான். ‘இப்படித் தூசும் நூலாம்படையும் மண்டிக்கிடக்கும் இந்த அறையை எப்படிச் சுத்தம் செய்து, இதிலுள்ள தேவையான பொருள்களை எடுத்து வைப்பது? இது மிகவும் கடினமான செயலாற்றே!’ என்று குழம்பியவாறு நின்றான். இதற்குள் நண்பகல் வேலை வந்துவிட்டது. சாப்பிடுவதற்கு அவன் கீழே சென்றபொழுது, வயதானவர் அவனிடம், “வேலையெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது?” என்று கேட்க, அவன், “என்னால் அந்த அறைக்குள் போகவே முடியவேவில்லை. அந்தளவுக்கு அதில் தூசும் நூலாம்படையும் மண்டிக்கிடக்கின்றன” என்றான். இதைக் கேட்ட வயதானவர், “இந்தா! இன்றைய நாளுக்குரிய சம்பளம்…! நாளைய நாளிலிருந்து நீ வேலைக்கு வரவேண்டாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மறுநாள் வயதானவரின் வீட்டிற்கு முன்னால் இருந்த அறிவிப்புப் பலகைப் படித்துப் பார்த்த கிறிஸ்டோபர் என்ற இளைஞன் வயதானவரின் வீட்டிற்குள்ளே வந்தான். அவனைப் பார்த்துவிட்டு வயதானவர் அவனிடம், முந்தைய நாளில் வந்த ஜானிடம் சொன்னதையே சொல்லி அனுப்பிவைத்தார்; ஆனால், கிறிஸ்டோபர் ஜானைப் போன்று இல்லாமல், அந்த மாடி அறையை நன்றாகச் சுத்தம் செய்து, அந்த அறையில் இருந்த தேவையான பொருள்களையெல்லாம் எடுத்துவைத்துவிட்டு, தேவையற்ற பொருள்களையெல்லாம் பெரிய பெட்டியில் போட்டு தீயிட்டு எரித்தான். பகல் உணவை உண்பதற்காக கிறிஸ்டோபர் கீழே வந்தபொழுது, வயதானவர் அவனிடம், “வேலையெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது?” என்று கேட்க, அவன், மாடியறையிலிருந்து பத்திரமாக எடுத்து வைத்த, ஒருசில இரசீதுகளையும் ஆவணங்களையும் இவரிடம் கொடுத்தான். அவற்றைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சியடைந்த வயதானவர், “இத்தனை நாள்களும் நான் இந்த ஆவணங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது இவை உன் வழியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி” என்று சொல்லி, அவனை நிரந்தரமாக வேலையில் அமர்த்தினார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்டோபர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைப் பொறுப்புடன் செய்ததால், அந்த வேலையில் அவன் நிரந்தரமாக அமர்த்தப்பட்டு, பின்னாளில் பெரியவனானான். பொதுக்காலம் இருபத்து ஏழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளைச் நல்லமுறையில் செய்து ‘பலன்தரும் பணியாளர்களாக’ வாழ அழைப்புத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைக்கும் இறைவன்
இன்றைய நற்செய்தியில் இயேசு, கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இந்த உவமையில் வருகின்ற நிலக்கிழார் எப்படித் திராட்சைத் தோட்டத்தை நல்லமுறையில் பராமரித்து, அதைக் குத்தகைக்காரர்களிடம் ஒப்படைக்கின்றாரோ, அப்படி நம் ஆண்டவராகிய கடவுளும் நமக்கு நல்ல பெற்றோர், நல்ல இயற்கைச் சூழல், நல்ல உடல்நலம் இப்படிப் பல்வேறு ஆசிகளை வழங்குகின்றார்.
Source: New feed