பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19
அக்காலத்தில்
இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.
விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.
இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
திருத்தூதர்களான தூய சீமோன், யூதா ததேயு விழா
இன்று திருச்சபையானது திருத்தூதர்களான சீமோன் மற்றும் யூதா ததேயு ஆகிய இருவரின் விழாவைக் கொண்டாடுகிறது. இந்த நல்லநாளில் இவர்களின் சாட்சிய வாழ்வு நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக திருத்தூதர் சீமோனைக் குறித்துப் பாப்போம். இவர் கானான் ஊரைச் சேர்ந்தவர். இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த உரோமை அரசாங்கத்தை முறியடிக்க, அவர்களுக்கு எதிராக கலகக்காரரைப் போன்று செயல்பட்டதால் தீவிரவாதி என அறியப்பட்டவர். மேலும் கானாவூர் திருமணத்தில் இவரே மணமகனாக இருந்தார் என்றும் திருச்சபை மரபு சொல்கிறது.
நற்செய்தி நூற்களில் இவரைப் பற்றி அதிகமாகக் கேள்விப்படாவிட்டாலும் லூக்கா நற்செய்தி 22:36-38 பகுதியில் ஆண்டவர் இயேசு, “பணப்பை உள்ளவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்: வாழ் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும்” என்று சொல்கிறபோது சீடர்கள், “இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்பார்கள். ஆனால் இதில் சீமோனின் குரலே அதிகமாக ஒலித்தது என்று விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.
ஆண்டவர் இயேசு உதிர்த்தெழுந்த பின்பு இவர் திருத்தூதர் யாக்கோபுவிற்குப் பிறகு எருசலேமில் ஆயராக இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இவர் எகிப்து, லிபியா போன்ற பகுதிகளில் நற்செய்தியை அறிவித்தார் எனவும், டிராஜன் என்பவனின் ஆட்சிகாலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் எனவும் சொல்லப்படுகிறது. “சீமோன் யூதாவின் பாடுகள்” என்ற புத்தகத்தில் சுவானீர் என்ற இடத்தில் நற்செய்தியை அறிவிக்கின்றபோது அங்கே கயவர்கள் இவரை இரம்பத்தால் அறுத்துக் கொன்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆக, இயேசுவுக்காக எப்படிப்பட்ட துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்தார் என்று இவருடைய வாழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகிறது.
அடுத்ததாக திருத்தூதர் யூதா ததேயுவைக் குறித்துப் பார்க்கின்றபோது இவர் இயேசுவின் நெருங்கிய உறவினர். இவருடைய பெற்றோர்கள் அல்பேயு மற்றும் மரியா. இயேசுவின் முகமும், இவருடைய முகமும் ஒன்றுபோல இருந்ததால்தான் யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக பணம் வாங்கினார் என்று சொல்லப்படுகின்றது.
இவரைப் பற்றியும் நற்செய்தி நூலில் அதிகமான செய்திகள் காணக் கிடைக்கவில்லை. யோவான் நற்செய்தி 14:21-23 பகுதியில் இவர் ஆண்டவர் இயேசுவிடம், “ஆண்டவரே! நீர் உலகிற்கு உம்மை வெளிப்படுத்தாமல், எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே?” என்று கேட்பதற்கு இயேசு, “என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார், என் தந்தையும் அவர்மீது அன்புகொள்வார். நாங்கள் அவரிடம் வந்து, அவருடன் குடிகொள்வோம்” என்பார். இந்த ஒருபகுதியில்தான் நாம் யூதாவை குறித்து வாசிக்கின்றோம்.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் மெசபத்தோமியா, அர்மேனியா போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்தார் என்று சொல்லப்படுகின்றது. மேலும் திருத்தூதர் சீமோனோடு சுவானீர் என்ற பகுதியிலே நற்செய்தி அறிவிக்கின்றபோது கி.பி.68 ஆம் ஆண்டு அம்பு எய்து கொல்லப்பட்டார் எனவும் சொல்லப்படுகின்றது.
இவர் கைவிப்பட்டோர், அனாதைகள் போன்றோருக்குப் பாதுகாவலராக இருக்கின்றார். ஆண்டவர் இயேசு தூய பிரிஜித்துக்கு காட்சிகொடுத்தபோது அவர் “யூதாவிடம் உதவிவேண்டி மன்றாடினால் நிச்சயம் கிடைக்கும்” என்று சொன்னதாகச் சொல்லப்படுகின்றது.
சீமோன், யூதா ததேயு என்ற இவரின் வாழ்வையும் குறித்தும் வாசித்த நாம், அவர்கள் இருவருமே இயேசுவுக்காக எப்படிப்பட்ட துன்பங்களையும் தாங்கிக்கொண்டார்கள் என்று அறிகின்றோம். திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வோருமே இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும் என்றே திருச்சபையானது நமக்கு அழைப்புத்தருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்கள் ஆவோம். அத்தோடு இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பனிரெண்டு சீடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக தனியாக இறைவனின் மன்றாடினார் என்று படிக்கின்றோம். இந்தப் பகுதியில் மட்டுமல்லாது இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார் என்று விவிலியமானது நமக்குக் கற்றுத் தருகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கின்ற மக்களாகவும் வாழ்வோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்ரிக்கா கண்டத்தில் நற்செய்திப் பணியாற்றிய ஜோசப் லிவிங்ஸ்டன் என்பவர் ஒருகட்டத்தில் அங்கே இருக்கும் ஒருசில மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். அவ்வேளையில் அவர் “இயேசுவே உம்முடைய பணியைச் செய்யும் எனக்கு ஏன் இப்படி தொடர்ந்து துன்பங்கள் வருகின்றன” என்று இயேசுவை நோக்கி மன்றாடினார். அப்போது ஒரு தூண்டுதலின் பேரில் மத் 28:18 ல் வரக்கூடிய “விண்ணிலும், மண்ணிலும் எனக்கு எல்லா அதிகாரமும் அருளப்பட்டிருக்கிறது” என்னும் வசனத்தை வாசித்தார். அது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தந்தது. இயேசு விண்ணிலும், மண்ணிலும் எல்லா அதிகாரமும் கொண்டு செயல்படும்போது நான் எதற்கு யாருக்கும் பயப்படவேண்டும் ஆறுதல் அடைந்தார். அதன்பிறகு தொடர்ந்து இறைப்பணியை துணிவுடன் செய்த்துவந்தார்.
ஜெபம் எந்தளவுக்கு ஜோசப் லிவிங்ஸ்டன் என்ற அந்த நற்செய்திப் பணியாளருக்கு ஆற்றலைத் தந்தது என்பதை இந்த நிகழ்ச்சி மூலமாக அறிந்துகொள்கின்றோம்.
திருத்தூதர்களான தூய சீமோன், யூதா இவர்களின் விழாவைக் கொண்டாடும் நாம் இவர்களைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதற்கு ஜெபத்தை நமது ஆயுதமாகக் கொண்டு வாழ்வோம். இறையருள் பெறுவோம்.
Source: New feed