கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.
மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
நாம் செய்துகொண்டிருப்பது சிறிய செயலாக இருக்கலாம்; ஒருநாள் அது மிகப்பெரிய செயலாக மாறும் என்பது நிச்சயம்
நிகழ்வு
ஒரு மாலை வேளையில், பெரியவர் ஒருவர் தன் பேரனைக் கூட்டிக்கொண்டு வீட்டின் அருகே இருந்த குளத்திற்குச் சென்றார். அந்தக் குளத்தை கண்டதும் பேரன் – சிறுவன் – குதுகலமானான். அதனால் அவன் குளத்திலுள்ள நீரின் அளவை எப்படியாவது உயர்த்தவேண்டும் என்று முடிவு செய்தான்.
‘குளத்தில் உள்ள நீரின் அளவை உயர்த்துவதற்கு என்ன செய்யலாம்’ என்று யோசித்த அவன், குளக்கரையில் இருந்த சிறு சிறு கற்களை எடுத்துக் குளத்திற்குள் வீசினான். நீரின் அளவு கூடவில்லை. குளக்கரையில் கிடந்த பாறாங்கற்களையும் குளத்திற்குள் தள்ளிப் பார்த்தான். அப்பொழுதும் குளத்தின் நீர் மட்டம் உயரவில்லை. இதனால் அவன் மனமுடைந்து குளக்கரையின் ஓர் ஓரமாக நின்றுகொண்டு அழத் தொடங்கினான்.
அவனை தேற்றிய அவனது தாத்தா, அவனது கையில் ஒருசில கற்களைக் கொடுத்து, “இவற்றைக் குளத்திற்குள் எறி” என்றார். அவனும் அவ்வாறே செய்தான். அப்பொழுது அவர் அவனிடம், “தம்பி! நீ குளத்திற்குள் கற்களை எறிந்தபொழுது, அலைகள் எழுவதைக் கவனித்தாயா…?” என்று கேட்க, அவன் “ஆமாம்” என்றதும், அவர் அவனிடம் தொடர்ந்து பேசினார்: “குளத்தில் உள்ள நீரின் அளவை உன்னால் உயர்த்த முடியவில்லை என்று வருத்தப்படாதே! இந்த வயதில் உன்னால் குளத்தில் அலைகளை ஏற்படுத்த முடிகின்றதே என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள். இப்படியே நீ தொடர்ந்து செய்தால், என்றாவது ஒருநாள் உன்னால் இந்தக் குளத்தில் உள்ள நீரின் அளவை உயர்த்த முடியும். இது குளத்தில் உள்ள நீரின் அளவை உயர்த்துவதற்கு மட்டுமல்ல, எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும்.”
இப்படித் தன் தாத்தா சொல்லி வளர்க்கப்பட்ட சிறுவன்தான் பின்னாளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராய் உருவான நார்மன்வியர்.
ஆம், நாம் செய்யக்கூடிய செயல் சிறிதாக இருக்கின்றதே என்று வருந்தத் தேவையில்லை. அது என்றாவது ஒருநாள் மிகப்பெரிய விருச்சமாக மாறி நிற்கும் என்பது உறுதி. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறையாட்சியைக் கடுகு விதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். இயேசு ஏன் இறையாட்சியைக் கடுகுவிதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிடவேண்டும் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சிறிய தொடக்கம், பெரிய மாற்றம்
நற்செய்தியில் இயேசு, இறையாட்சிக்கு ஒப்பிடுகின்ற கடுகுவிதை, புளிப்பு மாவு ஆகிய இரண்டும் அளவில் சிறியவை; ஆனால் ஆற்றலில் பெரியவை. எப்படியெனில், மிகச் சிறிய கடுகுவிதை மண்ணில் ஊன்றப்பட்டு மரமாக மாறுகின்றபொழுது, வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு மிகப் பெரியதாக மாறுகின்றது. அதுபோன்று கையளவு புளிப்புமாவு மூன்று மரக்கால் மாவையே புளிப்பேறச் செய்கின்றது. இவ்வாறு அவை அளவில் சிறிதாக இருந்தாலும், படிப்படியாக வளர்ந்து, ஆற்றலில் பெரிதாக மாறிவிடுகின்றது. இறையாட்சியும் கூட ஆண்டவர் இயேசுவால் நாசரேத்து என்ற ஒரு சாதாரண சிற்றூரில் தொடங்கப்பட்டு, உங்களுக்குள், எனக்குள்; ஏன், இன்று இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பதாய் இருக்கின்றது.
இறையாட்சி எல்லாருக்கும் உரியது
நற்செய்தியில் இயேசு இறையாட்சியைக் கடுகு விதைக்கு ஒப்பிடுவதன் வழியாக, மற்றொரு மிகப்பெரிய உண்மையைச் சொல்கின்றார். எது என்னவெனில், இறையாட்சி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அது எல்லா மக்களுக்கும் சொந்தமானது என்பதாகும்.
மிகச் சிறிய அளவில் இருக்கும் கடுகுவிதை, வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கெல்லாம் தன்னுடைய கிளைகளில் தங்க இடம் தருகின்றது. அது போன்று இறையாட்சியானது எல்லா இனத்தவரையும், எல்லா மொழி பேசுவோரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இறையாட்சி எல்லாரையும் உள்ளடக்கியது அல்லது இறையாட்சியில் எல்லாருக்கும் இடம் உண்டு எனில், மனிதர்களிடம் இருக்கும் பிரிவினைகள், ஏற்றத்தாழ்வுகள் களையப்படவேண்டும்.
இன்று அறிவியலும் தொழில்நுட்படமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது; ஆனால், சக மனிதரை மனிதராக மதிக்காத நிலையயும், பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்க்கின்ற நிலையிலும்தான் இன்றும் தொடர்கின்றது. புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள்” (கொலோ 3: 15). நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம் எனில், நம் நடுவில் ஏற்றத்தாழ்வு நிலவுவது கடவுளின் பார்வையில் ஏற்புடையதாக இருக்குமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘சிறிய தொடக்கத்திலிருந்தே பெரிய செயல்கள் உண்டாகின்றன’ என்பார் ஜேம்ஸ் கிளியர் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் இந்தச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க, இயேசுவுக்கு உகந்த சிறி சிறு செயலை இன்றே தொடங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed