![](https://www.addaikalanayaki.com/wp-content/uploads/2020/10/jhgjhg-2.jpg)
ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
அக்காலத்தில்
ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்” என்றார்.
ஆண்டவரோ அவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார்.
அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
லூக்கா 13: 10-17
“குறைகாணும் இடத்தில் வளர்ச்சிக்கு இடமில்லை”
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் (Wisconsin). இந்தப் பலகலைக்கழகத்தில் உள்ள ஆண் எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளைத் திறனாய்வு செய்வதற்காக ‘Stranglers’ என்றொரு குழுவைத் தொடங்கினர். இவர்களைப் பார்த்துவிட்டு, அதே பல்கலைக்கழகத்தில் இருந்த பெண் எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளைத் திறனாய்வு செய்ய, ‘Wranglers’ என்ற குழுவைத் தொடங்கினர்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. இருபது ஆண்டுகளுக்கு பிறகு பெண் எழுத்தாளர்கள் தொடங்கிய, ‘Wranglers’ என்ற குழுவில் இருந்த பல எழுத்தாளர்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்க, ஆண் எழுத்தாளர்கள் தொடங்கிய ‘Strangles’ என்ற குழுவில் இருந்தவர்களுள் ஒருவர்கூட சோபிக்கவில்லை.
இதற்கான காரணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்த மற்றவர்கள் ஆய்வு செய்து பார்த்தபொழுது ஓர் உண்மை மிக அழகாக வெளிப்பட்டது. அது என்னவெனில் ஆண் எழுத்தாளர்கள் ஒருவர் மற்றவரைக் குறைகூறிக்கொண்டே இருக்க, பெண் எழுத்தாளர்கள் ஒருவர் மற்றவரைப் பாராட்டிக்கொண்டே இருந்துதான்.
ஆம், மற்றவர்களை நாம் பாராட்டுகின்றபொழுது உயர்வடைகின்றோம். அதே நேரத்தில் மற்றவர்களிடம் நாம் குறைகாணுகின்றபொழுது வீழ்ச்சியடைகின்றோம். அதைத்தான் மேலே உண்மை நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, பதினெட்டு ஆண்டுகளாகக் கூன்விழுந்த நிலையில் இருந்த பெண்மணியை நலப்படுத்தியதும், தொழுகைக்கூடத் தலைவர் அவர்மீது குற்றம் காண்பதும், சாதாரண மக்கள் மகிழ்ச்சியடைவதுமாக இருவேறு விதமான எதிர்வினைகள் நடக்கின்றன. இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு கூன்விழுந்த பெண்ணுக்கு நலமளித்தல்
திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிப்பதுபோல், இயேசு தூய ஆவியாரின் வல்லமையால் நிரப்பப்பட்டவராய் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10: 38). இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் என்பதற்கு ஒரு சான்றாக இருப்பதுதான், இன்றைய நற்செய்தியில் அவர் பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவியின் பிடிக்குள் இருந்த கூன் விழுந்த பெண்மணியை நலப்படுத்தியது. பதினெட்டு ஆண்டுகள் என்பது மிக நீண்டது. அவ்வளவு ஆண்டுகளும் கூன் விழுந்த நிலையிலேயே அந்தப் பெண்மணி இருந்தார் என்பது மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு நிலைதான். அத்தகைய நிலையில் இருந்த பெண்மணியின்மீது ஆண்டவர் இயேசு பரிவுகொண்டு, “அம்மா! உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, அவர்மீது தம் கைகளை வைக்கின்றார்.
இயேசு அந்தப் பெண்மணியின்மீது தம் கைகளை வைத்ததும், அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். பொதுவாக உடல் நலமற்றிருக்கும் மனிதர்கள், நம்பிக்கையோடு இயேசுவைத் தேடி வந்து, அவரிடமிருந்து நலம்பெறுவது உண்டு; ஆனால் இன்றைய நற்செய்தியில் இயேசுவே கூன்விழுந்த நிலையில் இருந்த பெண்மணியின்மீது பரிவுகொண்டு, அவருக்கு நலமளிக்கின்றார். இது கூன் விழுந்த நிலையில் இருந்த பெண்மணியின்மீது ஆண்டவர் இயேசு கொண்ட பரிவு மிகவும் ஆழமானது என்பதைக் காட்டுகின்றது.
குற்றம் காணும் தொழுகைக்கூடத் தலைவர்
ஆண்டவர் இயேசு, பதினெட்டு ஆண்டுகளாய்க் கூன் விழுந்த நிலையில் இருந்த பெண்மணியை நலப்படுத்தியதும், தொழுகைக்கூடத் தலைவர், சினம் கொண்டு, “வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து நலம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்” என்று மக்கள் கூட்டத்தினரைப் பார்த்துக் கூறுகின்றார். உண்மையில் இந்த மனிதருக்கு பதினெட்டு ஆண்டுகளாக நலமற்றிந்த பெண்மணி, நலம் பெற்றிருக்கின்றாரே என்ற மகிழ்ச்சி சிறிதுகூட இல்லை. மாறாக, இவருக்கு ஓய்வுநாளில் அந்தப் பெண்மணிக்கு இயேசு நலமளித்துவிட்டார் என்பதுதான் பெரிய குறையாகத் தெரிகின்றது. நம்முடைய வாழ்விலும், இதுபோன்று குறைகளை மட்டுமே காணக்கூடிய மனிதர்களைக் காணலாம்.
மகிழ்ச்சியடைந்த மக்கள்
தொழுகைக்கூடத் தலைவர் இயேசு செய்த செயலை பெரிய குறையாகப் பார்த்தபொழுது, தொழுகைக்கூடத்தில் இருந்த மக்களோ, இயேசு செய்த மாட்சிக்குரிய செயல்களைக் கண்டு மகிழ்கின்றார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர்கள் இயேசு செய்த மாட்சிக்குரிய செயல்களைக் கண்டு, அவரைப் பாராட்டுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் மகிழ்கின்றார்கள்.
ஆம், நாம் மற்றவர்களின் செயலில் குறையை மட்டும் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் தொழுகைக்கூடத் தலைவரைப் போன்று சினமும், நிம்மதியின்மையின் ஏற்படும். மாறாக, மற்றவர்கள் செய்யும் செயலைப் பாராட்டக் கற்றுக்கொண்டால், நற்செய்தியில் வரும் சாதாரண மக்களைப் போன்று மகிழ முடியும். நாம் மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டுகின்றோமா? அல்லது குறைகூறுகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன்’ (32:3) என்கிறது இணைச்சட்ட நூல். ஆகையால், நாம் கடவுளின் மாட்சியையும், மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களையும் பாராட்டுவோம். எப்பொழுதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed