நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21
அக்காலத்தில்
கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
கடவுளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தும் காசு”
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் மறைப்போதகரான ராபர்ட் ஹால் (1764-1831). ஒருமுறை இவரிடத்தில் ஒருவர் வந்தார். அவரை இவருக்கு நன்றாகத் தெரியும்; பணம் மட்டுமே வாழ்க்கை என நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த அவருக்கு ராபர்ட் ஹால் நல்லதொரு பாடம் புகட்ட நினைத்தார்.
அதனால் ராபர்ட் ஹால் திருவிவிலியத்தைத் தம் கையில் எடுத்து, அதில் ‘கடவுள்’ என்று இருந்த இடத்தில், தம் விரலை வைத்து, “இதில் என்ன எழுதி இருக்கின்றது என்று தெரிகிறதா?” என்றார். “கடவுள் என்று எழுதியிருக்கின்றது” என்றார் அந்த மனிதர். பின்னர் ராபர்ட் ஹால் தன்னுடைய சட்டைப் பையிலிருந்த ஒரு நாணயத்தை எடுத்து, கடவுள் என்று இருந்த இடத்தில் வைத்து, “இப்பொழுது இந்த இடத்தில் என்ன இடம்பெற்றிருக்கின்றது என்று தெரிகிறதா?” என்றார். “தெரியவில்லை” என்றார் அவர்.
ராபர்ட் ஹால் அவரிடம் தொடர்ந்து பேசினார்: “இப்பொழுது நான் உன்னிடம் என்ன சொல்லப்போகிறேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும்… பணம்தான் பெரிது என்று வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்; ஆனால், அந்தப் பணமே நீ கடவுளைக் காணமுடியாதவாறு உன்னுடைய கண்ணை மறைத்துவிடும். மட்டுமல்லாமல் எல்லாவிதத் தீமைகளுக்குள்ளும் அது உன்னை விழத் தாட்டிவிடும். அதனால் மிகவும் கவனமாய் இரு.”
பலர் இந்த நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்றுதான் பணமும் பொருளும் உடைமைகளும்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. இன்றைய நற்செய்தி வாசகம், பணமும் உடைமைகளும் மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவருடைய முடிவு எப்படி இருக்கும் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைப் பாகம் பிரிப்பவராக அமர்த்த முயன்ற மனிதர்!
இயேசு மக்கள் நடுவில் பணியாற்றும்பொழுது இறையாட்சி, இறையன்பு, மன்னிப்பு, பரிவு….. போன்ற மிக உன்னதமான நெறிகளைப் போதித்து, அவர்களும், அனைத்திற்கும் மேலாகக் கடவுளுடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றை நாட வேண்டும் (மத் 6: 33) என்றும் போதித்தார். இப்படியிருக்கையில் ஒருவர் இன்றைய நற்செய்தியில், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதருக்குச் சொல்லும்” என்கின்றார்.
யூத இரபிகள் மக்கள் நடுவில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது வழக்கம். அந்த அடிப்படையில்தான் இந்த மனிதர், இயேசுவிடம், சொத்தை என்னோடு பங்கிக்கொள்ளுமாறு என் சகோதருக்குச் சொல்லும் என்கின்றார். மோசேயின் சட்டப்படி, தலைச்சன் பிள்ளைக்குச் சொத்தில் மூன்றில் இரண்டு மடங்கும், அதற்கு அடுத்து உள்ளவருக்கு ஒரு மடங்கும் கொடுக்கப்படுவது வழக்கம். உண்மை இப்படி இருக்கையில் இந்த மனிதர் இயேசுவிடம், சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குக் சொல்லும் என்று சொன்னதால் இயேசு, ‘இந்த மனிதர் பேராசையால் இப்படிச் சொல்கின்றார் என்று, “எவ்வகைப் பேராசைக்கும் இடம்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்…..” என்கின்றார்.
கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்து வைப்போம்
இயேசுவிடம் பேசிய மனிதர், தன்னுடைய சகோதரன் (நிச்சயம் அவர் மூத்தவராகத்தான் இருந்திருக்கவேண்டும்) சொத்தைத் தன்னோடு பங்கிக்கொள்ளும் பட்சத்தில், தனக்கு நிறைய சொத்துச் சேரும். அதன்மூலம் தான் பெரிய செல்வராக செல்வந்தராகி விடலாம் என்ற பேராசையோடு இருந்திருக்கவேண்டும்; ஆனால், இயேசு அவரிடம் எவ்வகைப் பேராசைக்கும் இடம்கொடுக்க வேண்டாம் என்றும், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்றும் கூறுகின்றார். இதை விளக்க இயேசு சொல்லும் உவமைதான் அறிவற்ற செல்வந்தன் உண்மை.
இயேசு சொல்லும் உவமையில் வரும் செல்வந்தன், மனிதருக்கு முன் செல்வம் சேர்க்க நினைத்தானே ஒழிய, கடவுளுக்கு முன் செல்வம் சேர்க்கவில்லை. அதாவது அவன் தன்னிடம் இருந்தைப் பிறரோடு பகிர முன் வரவில்லை. அதனால் அவனுடைய முடிவு மிகக் கொடூரமாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் மனிதர்முன் அல்ல, கடவுள் முன் செல்வந்தவர்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம். ஆதலால் நாம் பேராசைக்கு இடம்கொடாமல், இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து, கடவுள்முன் செல்வந்தர்களாய் இருப்போம்.
சிந்தனை
‘பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், ‘நான் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலக மாட்டேன்’ என்று கடவுளே கூறியிருக்கின்றார்’ (எபி 13: 5) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். நாம் பொருளாசை விட்டுவிலகி, ஆண்டவர்மீது ஆழமான பற்றுக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed